Parasakthi: முப்பாட்டன் முருகன் இல்லாத தமிழ் போரா? அரங்கையே நிரப்பிய அந்த ஒற்றை வசனம்
சென்னை: திட்டமிட்டபடி இன்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகி நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த பராசக்தி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புக்கு எதிராக நடைபெற்ற மொழிப்போரை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. பராசக்தி மாதிரியான மொழிப்போர் குறித்த படத்தில் இடம்பெறும் வசனங்கள் காலத்திற்கும் நின்று பேசும் வசனங்களாக இருக்க வேண்டும் என சுதா கொங்கரா மற்றும் அவரது குழுவினர் பார்த்தா பார்த்து எழுதியுள்ள வசனங்கள் படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக உள்ளது.
1965 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்த அனைவருக்கும் மொழிப்போர் குறித்த விழிப்புணர்வும் போராட்ட குணமும் இருந்ததா என்றால் இல்லை. ஆனால் இந்தி திணிப்பின் தாக்கத்தை அவர்கள் எதிர் கொண்டுள்ளார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை படத்தில் காட்சி ஆக்கிய விதம் சிறப்பு.

அப்படி இருக்கும்போது படத்தில் புறநானூற்றுப் படையைச் சேர்ந்தவர்கள் தீ பரவட்டும் ( சென்சாரில் நீதி பரவட்டும் என்று மாற்றி உள்ளார்கள்), தமிழ் வாழ்க, உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்பது போன்ற முழக்கங்களை பயன்படுத்தி போராட்டத்தை நடத்துகிறார்கள், மொழிப்போர் மீது அக்கறை கொண்ட ஒரு சாமானிய விவசாயி கதாபாத்திரமாக வரும் காளி வெங்கட், ”வெற்றிவேல் வீரவேல்" என்று முழங்குவது என்பது மொத்த அரங்கையுமே அதிரச் செய்துவிட்டது.
தமிழ் கடவுள்: தமிழ் கடவுள் முருகன், முப்பாட்டன் முருகன் என தமிழ்நாட்டு மக்களால் மதப் பாகுபாடு இன்று கொண்டாடப்படும் முருகனை ஆராதிக்கும் சொற்களான வெற்றிவேல் வீரவேல் என்ற சொற்கள் என்பது வெறுமனே இட்டு நிரப்பும் சொற்களாக பயன்படுத்தபடவில்லை. போர் என்றாலே தமிழ்நாட்டு மன்னர்களும் அவர்தம் படைகளும் ”வெற்றிவேல் வீரவேல்” என்று முழங்கிக் கொண்டே போர்க்களத்திற்கு சென்ற வரலாற்றை இந்த மண் சந்தித்திருக்கிறது.

வெற்றிவேல் வீரவேல்: அப்படி இருக்கையில் மொழிப்போரில் ”வெற்றிவேல் வீரவேல்” என்ற முழக்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும் சாமானிய விவசாயி கதாபாத்திரம் கதைக்கு தேவைப்படுவது மட்டுமல்லாமல், சமகாலத்தவர்களுக்கு வரலாற்றையும் அதன் மரபையும் எடுத்துக் கூற வேண்டிய தேவையும் உள்ளது. காளி வெங்கட்டின் இந்த மிகவும் உணர்ச்சிப் பெருக்காக மாறிவிடாமல், அர்த்தம் வாய்ந்ததாவும் நிதானமான அழகியலாகவும் காட்சி படுத்தியது அருமை. அந்த அடிப்படையில் வெற்றிவேல் வீரவேல் என்ற வசனத்தை இடம் பெறச் செய்ததற்காக சுதா கொங்கராவுக்கும் அவரது குழுவினருக்கும் தனி பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications











