Parasakthi Semiotics Details: பராசக்தியில் இதையெல்லாம் கவனிங்க.. சும்மா புல்லரிக்கும்.. சபாஷ் சுதா கொங்கரா
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் நேற்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வரவேற்பும் சிறப்பாகவே கிடைத்தது. பராசக்தி படம் திமுகவிற்கு ஒரு கூடுதல் அட்வாண்டேஜாக எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் இருக்கப்போகிறது என்று பேச்சுக்கள் அடிபட்டாலும், மாணவர்களின் புறநானுற்றுப் படை நடத்தும் போராட்டங்களுக்கும் தங்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை என்று பேரறிஞர் அண்ணாவே சொல்வது போல காட்சியை படத்தின் ப்ரீ கிளைமாக்ஸில் இருக்கிறது.
மொழிப்போர் என்றாலே தவிர்க்கும் இடத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இல்லை. அப்படி படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா தனது திரைப்படமாக்கல் முறையில் குறியீடுகள் மூலம், எப்படி எல்லாம் ரசிகர்களுக்கு இந்த மொழிப் போருக்கும் திடாவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தொடர்புகள் உள்ளது என காட்சிப்படுத்தி இருப்பது அருமை.

சிவகார்த்திகேயன் தனது தம்பி அதர்வாவிடம் இந்த அண்ணா சொல்வதையும் கேளுடா என்று கூறுவார். அப்போது அதர்வா சிவப்புச் சட்டையும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருப்பார். அதாவது அதர்வாவின் சின்னதுரை கதாபாத்திரம் திமுகவைச் சேர்ந்தவர் என்பதை விளக்குகிறது. அண்ணா, கலைஞரை கைது செய்த காட்சிக்குப் பின்னர், தலைவரை கைது செய்தால் என்ன, நாம் போராடுவோம் என்று சின்னத்துரை சொல்லுவார்.
திக - திமுக: அந்த வகையில், படத்தின் இடைவேளை காட்சிக்கு முன்னர் செழியன் கதாபாத்திரம் அதாவது சிவகார்த்திகேயன், மெட்ராஸின் முதலமைச்சரை பார்த்து இந்தி திணிப்புக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசுவார். அந்த காட்சியில் இரண்டு முக்கிய குறியீடுகள் உள்ளது. ஒன்று செழியன் கதாபாத்திரம் கருப்பு நிற சட்டை அணிந்திருப்பது, மற்றொன்று செழியனுக்கு பின்னால் சூரியன் இருப்பது போன்ற காட்சி. கருப்பு என்றாலே திராவிடர் கழகம் என்றும், சூரியன் என்றாலே திமு கழகம் என்றும் காட்சிகளால் உணர்த்தி உள்ளார்.

கருப்பும் சூரியனும்: அதேபோல் டெல்லியில் பிரதம அமைச்சரிடம் செழியன் இந்தி திணிப்புக்கு எதிராக முறையிடும் போது கருப்பு நிற சட்டை அணிந்திருப்பார். மேலும் தான் படித்த பச்சையப்பன் கல்லூரிக்குச் சென்று மாணவர்களை திரட்டி, அவர்கள் மத்தியில், சேனை ஒன்று தேவை, செந்தமிழைக் காக்க பெரும் சேனை ஒன்று தேவை என்று செழியன் பேசும்போதும் அவருக்குப் பின்னால், சூரியன் இருக்கும். கிளைமாக்ஸில் செழியன் கருப்பு நிற சட்டையும், திருநாடன் ( ரவி மோகன்) வெள்ளை நிற உடையும் அணிந்திருப்பார்கள். இதில் செழியன் நீதியாகவும் திருநாடன் அழிக்கப்பட வேண்டிய அநீதியாகவும் எனவும், அநீதியை நீதி வென்றே தீரும் என்று உணர்த்தியுள்ளார். மேலும் வெள்ளை என்றால் சுத்தம், வெள்ளை என்றால் நேர்மை, நீதி என்ற கற்பனைவாதத்தையும் உடைத்துள்ளார்.
வெற்றிவேல் வீரவேல்: படத்தில் பல முக்கியமான வசனங்கள் இருந்தாலும் அவைகள் எல்லாம் அந்த காட்சிக்கு பொருத்தமானதாகவே இருந்துள்ளது. ஆனால் ஒரு வசனத்தை எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. அப்படியான வசனம் தான் படத்தின் கிளைமாக்ஸில் காளி வெங்கட் கதாபாத்திரம் சொல்லும், " வெற்றிவேல் வீரவேல்" என்ற வசனம். வெற்றிவேல் வீரவேல் என்பது தமிழ் கடவுள் முருகனை ஆராதிக்க முழக்கங்கள், அதேபோல் பண்டைய காலத்தில் தமிழ் மன்னர்கள் போருக்குச் செல்லும்போது மன்னர்களும் அவர்தம் படைகளும் வெற்றிவேல் வீரவேல் என்று உரக்கச் சொல்லிவிட்டுத்தான் போருக்குப் போவார்கள். அப்படி சாமானிய விவசாயப் பின்னணி கொண்ட காளி வெங்கட் கதாபாத்திரம் கையில் ஒரு அரிவாளை (ஆயுதம்) ஏந்திக் கொண்டு, வெற்றிவேல் வீரவேல் என்று சொல்வது என்பது இது ஒரு போர், அந்த போரில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார் என்றும், தமிழ் கடவுள் முருகன் இல்லாத மொழிப் போரா என்றும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

பாராட்டுகள்: அதேபோல் மெட்ராஸ் முதலமைச்சர், புறநானூற்றுப் படை மாணவர்களை விமர்சிக்கும்போது மைக் கிடைத்தால் மணிக்கணக்காக பேசுவார்கள் என்று விமர்சிப்பார். அப்படி பொதுக் கூட்டங்களில் மணிக்கணக்காக பேசி பேசி தமிழ்நாடு முழுவதும் திராவிட சித்தாந்தத்தை அக்காலகட்டத்தில் பேசியவர்கள் திக மற்றும் திமுகவினர். அவர்களை விமர்சிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. இவை மட்டும் இல்லாமல் படம் முழுவதும் மொழிப்போர் காலத்து தலைவர்களை தைரியமாகவும் வெளிப்படையாகவுமே காட்சி படுத்திய தைரியத்திற்கும் தமிழ் ரசிகர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இப்படி ஒரு படம் கொடுத்ததற்காகவும் சுதா கொங்கராவுக்கு பாராட்டுகள்.



Click it and Unblock the Notifications











