Parasakthi Trailer: டெல்லி தான் இந்தியாவா? சிவகார்த்திகேயன் பட டிரைலரில் அதர்வா ஸ்கோர் பண்றாரே
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள பராசக்தி படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் என பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலர் இன்று அதாவது ஜனவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ளது. படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று நிமிடங்கள் 16 விநாடிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலர் மிகவும் நேர்த்தியாகவும் படத்தின் கதையை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மொத்த டிரைலருக்கும் உலகத் தரத்தை கொடுக்கிறது. மாணவராக வரும் அதர்வா இந்தி திணிப்பு எதிராக செய்யும் கலகத்தில் இருந்து தான் படம் தொடங்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதர்வா பேசும் ஒரு வசனம், படத்தின் மையக் கதையை காத்திரமாக வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது, " டெல்லி தான் இந்தியாவா?" என்று கேட்கும் அவரது வசனத்தை ஏதோ பொழுதுபோக்கு சினிமாக்களில் பயன்படுத்தும் ஃபில்லர்ஸ் ( Fillers) என்று கருதிவிட முடியாது. அது பெருவாரியான தமிழ்நாட்டு மக்களின், தொடர்ந்து உரக்க ஒலிக்கும் குரல்.
நிலைப்பாடு: அதேபோல் சிவகார்த்திகேயன் பேசும் வசனங்களில் மிகவும் முக்கியமானது, "நாங்கள் இந்தி திணிப்புக்கு தான் எதிரானவர்கள், இந்திக்கும் இந்தி பேசும் மக்களுக்கு அல்ல" என்ற வசனம், சம எக்காலத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டிய, சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் நிலைப்பாடு. அது சமகாலத்திலும் இருப்பது பெருமைக்குரிய விஷயம். அதேபோல் மதராஸி ஒருவன் டெல்லிக்கு வந்தால் மதராஸி இந்தி பேசுவான். அதுவே இந்திகாரர் ஒருவர் மதுரைக்கு வந்தால், அவர் தமிழ் பேசுவது தானே சரி" என்ற வசனம், அந்த காலம் தொடங்கி, இப்போது வரை அதிகார வர்க்கத்திற்கும், இந்தி ஆதிக்க மனநிலை கொண்டவர்களுக்கும், இந்தி மொத்த இந்தியாவுக்குமான மொழியல்ல என்ற விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும் எடுக்கப்படும் பாடம்.

பேரறிஞர் அண்ணா: அதே நேரத்தில் சாமானிய மக்கள் தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வருபவர்கள், தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுத படிக்க கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படி கற்று இன்றைக்கு சமூகத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்களை இன்றைக்கும் தமிழ்நாட்டில் அடையாளப்படுத்த முடியும். டிரைலரில் பேரறிஞர் அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேத்தன் பேசும் வசனமும் முக்கியமானது. அதாவது, " இதைச் செய்தது நாங்கள் அல்ல, ஆனால் இதை யார் செய்திருந்தாலும் அவர்கள் என் தம்பிகளே" என்ற வசனம், அண்ணாவின் இருமொழிக் கொள்கை குறித்த புரிதலும் ஏற்பும் அன்றைய மாணவர் சமூகத்தில் எந்த அளவுக்கு இருந்தது என்பதும் வெளிப்படுகிறது.
நம்பிக்கை: மேலும் அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த எந்த அளவுக்கு மூர்க்கத்தனமாக இருந்தது என்பதன் உருவமாக ரவி மோகனை சித்தரித்துள்ள விதமும் அவர் பேசும் வசனங்களும், மொழிப்போரின் களத்திற்கு நம்மை இட்டுச் செல்வது போல் உள்ளது.மொத்த டிரைலருமே படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் ஆக்ஷன் காட்சிகளுடனும் காதல் காட்சிகளுடனும் ஒரு பக்கா கமர்ஷியல் - பொலிடிக்கல் டிராமாவாக படம் உருவாகி உள்ளது என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.



Click it and Unblock the Notifications











