சிவகார்த்திகேயன் வானத்தில் ஒரு நட்சத்திரம்.. மகள் வாங்கிய விருது.. அப்பாவா எவ்வளவு பெருமை பாருங்க
சென்னை: சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மூத்தவரான ஆராதனா கனா திரைப்படத்தில், 'வாயாடி பெத்த புள்ள' பாடலை பாடி அசத்தியிருந்தார். அந்தப் பாடல் சூப்பர் வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் அவருக்கு அந்தப் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டது. அப்போது ஒரு தந்தையாக சிவா செய்த செயல் அனைவரிடத்திலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த ரெஸ்பான்ஸை பெறவில்லை. ஆனால் வசூலில் நூறு கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக படத்தை தயாரித்த டான் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனவே சிவா நடித்து 100 கோடி ரூபாய் வசூலித்த படங்களில் நான்காவது படமாக அமரன் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறது.
அடுத்த படம்: சிவாவின் லைன் அப்பை பொறுத்தவரை அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அது சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாவதால் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு சில காலம் எடுக்கும் என்பதால் அந்த கேப்பில் இன்னொரு படத்தில் நடித்துவிடலாம் என பிளான் செய்தார். யார் அந்தப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்த சூழலில் நேற்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் விதத்தில் வந்தது அறிவிப்பு.

சிவகார்த்திகேயனின் சேயோன்: அதாவது எஸ்கே தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் என்ற புதுமுகம் தாய் கிழவி படத்தை இயக்கியிருக்கிறார். 27ஆம் தேதி படம் வெளியாகிறது. அப்படத்தை பார்த்த எஸ்கே ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டதால் உடனடியாக சிவக்குமார் இயக்கத்திலேயே தனது 26ஆவது படத்தில் நடிக்கிறார். கமல் தயாரிக்கும் இப்படத்துக்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவா முருகன் பக்தராக நடிக்கிறார் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கையில் தெரிகிறது.
சிவாவின் மகளுக்கு விருது: இப்படி தனது கரியரில் முழு கவனம் செலுத்தி வரும் அவருக்கு சமீபத்தில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயமும் நடந்தது. அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு அவர் தயாரித்திருந்த கனா திரைப்படத்தில் சிவாவின் மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடினார். அதுதான் அவர் பாடிய முதல் பாடல். அது அப்போதைக்கு பெரிய சென்சேஷனல் ஆனது. அந்தப் பாடலை பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழ்நாடு அரசு விருதையும் அவர் சமீபத்தில் பெற்றார். இது சிவா ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் ஒருதரப்பினர், சில வரிகள் பாடியதற்காக விருதா? இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
சிவகார்த்திகேயன் செய்தது: சில நாட்கள் தொடர்ந்து அந்த விமர்சனங்கள் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. ஆராதனா விருது வாங்கும்போது கீழே அமர்ந்திருந்த சிவகார்த்திகேயன் பெருமிதத்துடன் தனது மொபைல் ஃபோனில் வீடியோ எடுத்தார். இதை பார்த்த ரசிகர்கள், ஒரு அப்பாவாக சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து இதுபோன்ற பெருமைகளை வருங்காலங்களில் ஆராதனா பெற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











