மெகா பிளாக்பஸ்டர்.. 100 கோடி வசூலை தட்டித் தூக்கிய டான்.. லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
11 நாட்கள் வரை 96 கோடி வசூல் பெற்றிருந்த டான் திரைப்படம் 12வது நாளில் 100 கோடி வசூலை தாண்டி தாறுமாறு செய்துள்ளது.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, பால சரவணன், சிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சாதித்த சிவகார்த்திகேயன்
கோலிவுட்டின் புதிய எழுச்சி நாயகனாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். மிஸ்டர் லோக்கல், சீமராஜா என தோல்வியை சந்தித்து வந்த நிலையில், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான் என கவனமாக படங்களை தேர்வு செய்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். பைலிங்குவல் படம், மாவீரன் என அடுத்தடுத்தும் அசால்ட்டு காட்ட காத்திருக்கிறார்.

100 கோடி வசூல்
கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியான டான் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், 12 நாட்களில் உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டி உள்ளது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் முதல் படமே அவர் தனது டான் படத்தில் வைத்த காட்சியைப் போலவே 100 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. அடுத்து இரண்டாவது படமாக பான் இந்தியா படத்தைத் தான் பண்ணப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த ஆண்டு வெளியான படங்களில் பல படங்களின் அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்காத நிலையில், டான் படத்தின் வசூலை லைகா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாகவே ட்வீட் போட்டு அறிவித்துள்ளது. லைகா மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஹேப்பி
நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படம் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் 100 கோடி வசூலை வாரி குவித்திருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் உச்சகட்ட சந்தோஷத்தில் உள்ளார். பல முன்னணி நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சன ரீதியாக சொதப்பிய நிலையில், சிவகார்த்திகேயனின் டான் இரண்டிலுமே பக்கா மாஸ் காட்டியிருக்கிறது.. அடுத்த அடுத்த படங்களுக்கு சம்பளத்தை இன்னமும் தாராளமாக கூட்டிவிடுவார்.

லைகா நம்பிக்கை
டான் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு லைகா நிறுவனத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஏற்கனவே RRR படத்தை ரிலீஸ் செய்தும் நல்ல வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அடுத்ததாக பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதால் லைகா நிறுவனம் ஓவர் சந்தோஷத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











