Sivakarthikeyan's Maaveeran - மாவீரன்.. சோதனை மேல் சோதனை.. சிக்குகிறதா சிவகார்த்திகேயனின் படம்?
சென்னை: Sivakarthikeyan's Maaveeran (சிவகார்த்திகேயனின் மாவீரன்) சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மாவீரன் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் படக்குழு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். கரியரை அவர் ஆரம்பித்தபோது சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என பலர் கூறினர். ஆனால் தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்து நூறு கோடி வசூலிக்கும் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். விஜய்க்கு எப்படி சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர்களாக இருக்கின்றனரோ அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கின்றனர். அதற்கேற்றபடிதான் அவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

பிரின்ஸ் கொடுத்த அடி: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்த டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் படு உற்சாகத்தோடு காணப்பட்டார் சிவகார்த்திகேயன். அவரது உற்சாகத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்யும் விதமாக அமைந்தது பிரின்ஸ் திரைப்படம். தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை வளர்க்க பைலிங்குவலாக உருவான அந்தப் படத்தில் நடித்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது.
மாவீரன் சிவா: பிரின்ஸ் கொடுத்த தோல்வியை அடுத்து சுதாரித்துக்கொண்ட சிவகாரத்திகேயன் அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துவருகிறார். மடோன் அஸ்வின் மண்டேலா படத்தை இயக்கியவர். அந்தப் படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதையும் வென்றது. இதனால் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

வெற்றி கட்டாயம்: இரண்டு படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாய் வசூலித்தாலும் பிரின்ஸ் கொடுத்த மரண அடி சிவகார்த்திகேயனையும், அவரது ரசிகர்களையும் கொஞ்சம் ஆட்டம் காண வைத்தது. எனவே மாவீரன் படத்தின் மூலம் ஒரு வெற்றியை அறுவடை செய்ய தயாராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
சோதனை மேல் சோதனை: இந்நிலையில் மாவீரன் படத்துக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சிவகார்த்திகேயனும் படக்குழுவும் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது இன்று காலை முதல் தமிழ்நாட்டில் ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. மாவீரன் படம் ஜி ஸ்கொயர் ஃபண்டில்தான் தயாரிக்கப்படுகிறது என்ற பேச்சு ஒன்றும் ரொம்ப காலமாகவே கோலிவுட்டில் உண்டு.
சிக்கல் வருமா?: இதனால் ஒருவேளை மாவீரன் படத்தின் மீதும் வருமான வரித்துறையினரின் பார்வையும், கவனமும் திரும்பினால் அந்தப் படத்தின் வெளியீட்டுக்கு சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் படக்குழு இருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு இது சோதனை காலம்போல. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகா இப்படியெல்லாம் ஒரு சோதனை வரவேண்டும் என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











