100 கோடி இல்லை.. 500 கோடி போஸ்டர் கூட விடுங்க.. ஆனால், உண்மை இதுதான்.. பராசக்தியை பஞ்சராக்கிய ரசிகை!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் கடந்த பத்தாம் தேதி ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்த அந்தப் படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருக்கிறது. அதேசமயம் படம் நூறு கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டரை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். ஆனால் ரசிகை ஒருவர் பகிர்ந்திருக்கும் வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அமரன் படத்தின் மெகா வெற்றி சிவகார்த்திகேயனுக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. சூர்யாவை வைத்து அவர் இயக்குவதாக இருந்த புறநானூறு; எஸ்கேவுக்காக பராசக்தி என மாறியது. இதில் சிவாவுக்கு வில்லனாக ரவி மோகன் நடித்திருந்தார். ஸ்ரீலீலா ஹீரோயினாகவும், அதர்வா முக்கியமான கேரக்டரையும் ஏற்றிருந்தார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் தமிழ்நாட்டில் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி எடுத்திருந்தார்.
சுமாரான வரவேற்புதான்: படத்தின் கதைக்களம் இதுதான் என தெரிந்ததும் படத்துக்கு எக்கச்சக்க ஹைப் எகிறியது. பல வரலாறுகளையும், உண்மைகளையும் இந்தப் படம் எடுத்துரைக்கும் என்ற நம்பிக்கையோடு பத்தாம் தேதி படம் பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக இந்தப் படத்தை வீரியம் குறைவாக கொடுத்துவிட்டார் இயக்குநர் என கூறினார்கள். பலமாக எதிர்பார்த்து வந்தோம் ஆனால் எங்களுக்கு ஏமாற்றம்தான் என கலவையான விமர்சனத்தை கொடுத்தார்கள். இதனால் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

என்ன பிரச்னை?: படத்தின் பெரிய பிரச்னையாக இருந்ததே ராவாக கொடுத்திருக்க வேண்டிய கதைக்களத்தை தனது ஸ்டைலில் கொடுக்கிறேன் என்கிற பெயரில் சாந்தமாக மாற்றிவிட்டார் என்பதுதான். அதேசமயம் சென்சார் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடிகளால் பல இடங்களில் மியூட்டும், கட்டும் விழுந்துவிட்டன. அதன் காரணமாகக்கூட படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாமல் போயிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் பெரும்பாலானோரிடம் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்டர் வெளியிட்ட டான் பிக்சர்ஸ்: விமர்சன ரீதியாக படம் இப்படி அடி வாங்கிவிட்டது. அதேசமயம் படம் ரிலீஸாகி இரண்டு நாட்களில் 51 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக படக்குழு அறிவித்தது. அதற்கு பிறகு எந்த மூவ்மென்ட்டும் இல்லாமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க பத்து நாட்கள் கடந்த பிறகு நேற்று டான் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்த போஸ்டரில், 'பராசக்தி திரைப்படம் உலக அளவில் நூறு கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரசிகை வெளியிட்ட வீடியோ: இந்நிலையில் ரசிகை ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது சென்னை ஃபோரம் மாலில் இருக்கும் திரையரங்கு ஒன்றில் பராசக்தி பார்ப்பதற்காக நேற்று ரசிகை சென்றிருக்கிறார். ஆனால் ஷோ ஆரம்பிக்க ஐந்து நிமிடங்கள் இருக்கும்வரைகூட தியேட்டரில் ஒருவர்கூட இல்லை. கடைசியாக பத்துக்கும் குறைவானவர்கள் அமர்ந்து படத்தை பார்த்திருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, 100 கோடி ரூபாய் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. ஆனால் கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறதே என்று பேச தொடங்கியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











