2026 சட்டப்பேரவைத் தேர்தல்.. திமுகவுக்கு உதவப்போகும் சிவகார்த்திகேயனின் பராசக்தி.. என்ன நடக்கப்போகிறது?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி படம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது படம். நேற்று வெளியான ட்ரெய்லர் அனைவரிடமும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இது கண்டிப்பாக சிவாவின் கரியரில் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்ற கருத்துக்கள் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பராசக்தி. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சிவாவுக்கு இது 25ஆவது படம், ஜிவிக்கு இது 100ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏகப்பட்ட சிறப்புகளை பெற்றிருக்கும் இப்படத்தின் கதையே சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்தப் படத்தின் மீது அத்தனை பேரும் தங்களது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.
என்ன சிறப்பு?: தமிழ்நாட்டை பொறுத்தவரை சகிப்பு தன்மை நிறைந்திருக்கும் மாநிலமாகத்தான் இத்தனை காலமாக இருந்துவருகிறது. வட மாநிலங்களில் இருக்கும் மத வெறியெல்லாம் இங்கே பெரும்பாலும் செல்லுபடியாகாது. அதன் காரணமாகத்தான் தேசிய கட்சிகளின் பாச்சாப்பு எல்லாம் கடந்த அரை நூற்றாண்டாக செல்லுபடியாகாமல் இருக்கிறது. அதேபோல் இங்கே எதை வலுக்கட்டாயமாக திணித்தாலும் வீறுகொண்டு மக்கள் எழுந்து அதை எதிர்ப்பார்கள். அப்படித்தான் ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும் 1960களிலும் போராட்டம் வெடித்தது. அதை மையப்படுத்திதான் பராசக்தி கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

மரணமடைந்த மாணவர்கள்: பக்தவச்சலம் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தபோது 1963 - 65 காலகட்டத்தில் ஹிந்தியை ஆட்சி மொழியாக்கவும், ஆங்கிலத்தை தேவைப்பட்டால் பயன்படுத்தலாம் என்றும் சட்டம் வர; அதற்கு எதிராக இங்கே இருக்கும் மாணவர்கள் போராட களத்தில் குதித்தார்கள். அந்தப் போராட்டத்தை அப்போது அண்ணா தலைமையிலான திமுகதான் முன்னின்று நடத்தியது. அந்தப் போராட்ட தீ தான் பின்நாட்களில் திமுகவை அசைக்க முடியாத அரசியல் கட்சியாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் போராட்டத்தில், சின்னசாமி, அரங்கநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் தங்கள் உயிரை விட; போராட்டம் மேற்கொண்டு பற்றியது. அதனையடுத்து அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அந்த சட்டத்தை வாபஸ் பெற்று; ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடரும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். அப்போதிருந்து இப்போது வரை இந்தியாவில் எங்கே ஹிந்தி மொழி திணிக்கப்பட்டாலும்; தமிழ்நாட்டில் மாணவர்கள் நடத்திய போராட்டம்தான் உடனடியாக பலருக்கும் நினைவுக்கு வரும்.
பராசக்தி சொல்ல வருவது என்ன?: இப்போது இந்த வரலாறை அடிப்படையாக வைத்து சினிமாவுக்கு தேவையான விஷயங்களை சேர்த்து பராசக்தி படத்தை உருவாக்கியிருக்கிறார் சுதா. இதில் பேரறிஞர் அண்ணா கேரக்டரில் சேத்தன் நடித்திருக்கிறார். ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் திமுகவின் பங்கை தவிர்க்கவே முடியாது. எனவே அதுதொடர்பான காட்சிகளையும் வைத்தாக வேண்டிய சூழல் தானாகவே உருவாகிவிட்டது. இப்போது பராசக்தி படம் வருகையில் கண்டிப்பாக அனைவரிடமும் திமுகவின் அப்போதைய போராட்டம் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் மீண்டும் பேசுபொருளாகும் என்பதுதான் எதார்த்தம்.
திமுகவுக்கு உதவுமா?: முக்கியமாக இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பராசக்தி திரைப்படம் வருவது திமுகவுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட்டை கொடுக்கும் என்று நம்பலாம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு திமுகவின் தியாகங்கள், வரலாறுகள், போராட்டங்கள் என அனைத்தும் மக்களின் மனதிலும், புதிய தலைமுறை வாக்காளர்களின் மனதிலும் ஆழமாக பதிவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. எனவே தெரிந்தோ தெரியாமலோ திமுகவுக்கு சிவகார்த்திகேயனும், சுதா கொங்கராவும் 2026ஆம் ஆண்டு தேர்தலில் உதவி செய்யப்போகிறார்கள் என்றே இதனை எடுத்துக்கொள்ளலாம். பார்ப்போம், சுதா - சிவாவின் பராசக்தி தீ திமுகவுக்கு இத்தேர்தலில் எவ்வளவு வெளிச்சம் கொடுக்கப்போகிறது என்பதை.


Click it and Unblock the Notifications











