பாக்ஸ் ஆஃபிஸில் தடுமாறும் பிரின்ஸ்… மூன்றாம் நாள் வசூலில் சிவகார்த்திகேயனுக்கு ஏமாற்றம்…
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் சர்தாரும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், இரண்டாம், மூன்றாம் நாட்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

எஸ்கேவின் பிரின்ஸ்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு அக் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்தை அனுதீப் இயக்கியுள்ளார். ஜதி ரத்னலு படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அனுதீப், பிரின்ஸில் சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடியை மட்டும் மொத்த கதையாக மாற்றி ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். சிவகார்த்திகேயனின் படம் என்பதால், பிரின்ஸுக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

மூன்றாம் நாள் வசூல்
பிரின்ஸ் திரைப்படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்ததால், 7 முதல் 8 கோடி வரை வசூலித்தது. ஆனால், மோசமான திரைக்கதை, மேக்கிங்கில் சொதப்பல் போன்றவைகளால், இரண்டாம் நாளில் வசூல் குறையத் தொடங்கியது. அதன்படி இரண்டாம் நாளில் 5 முதல் 6 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. முதல் இரண்டு நாட்களில் மொத்தமே 12 முதல் 13 கோடி வரை தான் பிரின்ஸ் வசூல் செய்தது. இந்நிலையில், மூன்றாம் நாளில் மொத்தமே 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது பிரின்ஸ். இது முதல் இரண்டு நாட்களை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் 3 தினங்ளில் 16 முதல் 17 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது பிரின்ஸ்.

பிரின்ஸ் VS சர்தார்
அதேநேரம், முதல் நாளில் பெரிதாக ஓப்பனிங் இல்லாத சர்தார், இரண்டாம் நாளில் இருந்து வசூலில் மாஸ் காட்டியது. தண்ணீர் அரசியல், கார்த்தியின் ஆக்சன் ட்ரீட் ஆகியவற்றால் சர்தார் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், முதல் நாளில் பெரிதாக கவனம் ஈர்க்காத சர்தார், அடுத்த இரண்டு நாட்களிலும் வசூலில் பட்டையைக் கிளப்பியது. முதல் நாளில் 4 கோடி மட்டுமே வசூலித்த சர்தார், இரண்டாம் நாளில் மட்டும் 6 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

லாபம் கொடுத்த பிரின்ஸ்
திரையரங்குகளில் வசூல் குறைந்துகொண்டே சென்றாலும், பிரின்ஸ் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 60 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள பிரின்ஸ், ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட வகைகளில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னஸ் பார்த்துவிட்டது. அதனால், முதல் மூன்று நாட்களிலேயே பிரின்ஸ் படத்தின் முதலீடு தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. இனி பிரின்ஸ் படத்துக்கு பெரிதாக வசூல் இல்லையென்றாலும், நஷ்டம் அடையாது என பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











