Valentines Day - 10 தலைமுறையாகுது பள்ளிக்கூடம் அனுப்ப.. காதல் கேட்குதோ.. தாய் கிழவியின் ரகளையான க்ளிம்ப்ஸ்
சென்னை: சிவகார்த்தியேகன் தயாரிப்பில் ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் தாய் கிழவி திரைப்படம் 20ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மேக்கிங் வீடியோ உள்ளிட்டவை பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் வெளியாகியிருக்கும் க்ளிம்ப்ஸ் காட்சியும் சோஷியல் மீடியாவில் அப்ளாஸை அள்ள ஆரம்பித்திருக்கிறது.
நடிகராக கலக்கிவரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் பட்டையை கிளப்பிவருகிறார். இதுவரை அவர் தயாரித்த கனா, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வணிக ரீதியாகவோ அலல்து விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன. எனவே எஸ்கே புரொடக்ஷன்ஸிலிருந்து படம் வருகிறது என்றால் நிச்சயம் அது தரமான படைப்பாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே பலமாகவே எழுந்திருகிறது.
தாய் கிழவி: தற்போது சிவகார்த்திகேயன் தாய் கிழவி என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் ராதிகா லீடு ரோலை ஏற்றிருக்கிறார். அவருடன் இளவரசு, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சிவக்குமார் முருகேசன் படத்தை இயக்கியிருக்கிறார். இவர்தான் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் கதையாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலக்கும் ராதிகா: தாய் கிழவி படத்தில் ராதிகாவின் மேக்கப்பும், நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. முக்கியமாக அவர் போட்டிருக்கும் மேக்கப் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது கெட்டப்பை பார்த்து கமல்ஹாசனே பாராட்டியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. நிச்சயம் இப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் படத்தை சிவா பார்த்துவிட்டதாகவும்; அது அவருக்கு பிடித்துவிட்டதால் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சில நாட்களில் ரிலீஸ்: படமானது பிப்ரவரி 20ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. எனவே ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. தன் பங்குக்கு ராதிகா பல பேட்டிகளை கொடுத்துவருகிறார். பேட்டிகளில் இந்தப் படத்தின் மீது அவருக்கு இருக்கும் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்திவருகிறார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.
சூப்பர் க்ளிம்ப்ஸ்: அந்த க்ளிம்ப்ஸில், ராதிகா பேருந்தில் ஏறுகிறார். அப்போது பள்ளி மாணவி சக மாணவனை பார்த்து, 'என் அம்மாவுக்கு மருமகனா நீ வரணும்' என பாட; பின்னால் அமர்ந்திருக்கும் ராதிகா அந்த மாணவியின் தலையில் தட்டி, "பத்து தலைமுறை ஆகுது பள்ளிக்கூடம் அனுப்ப. நீ என்ன ஆட்டக்காரி வேஷம் போடுற" என வசனம் பேசுகிறார். இது பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு பெண் அடுப்பறையை விட்டு பள்ளிக்கு செல்ல எத்தனை இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது என்பதை ஒரே வசனத்தில் இயக்குநர் தலையில் அடித்து சொல்லிவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











