எல்லாம் விதி.. ராதிகாவின் தாய் கிழவியோடு மோதும் சரத்குமாரின் ஆழி.. சுப்ரீம் ஸ்டார் என்ன சொல்றாரு பாருங்க
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தாய் கிழவி திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நேற்று வெளியான ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சரத்குமார்; தான் நடித்திருக்கும் ஆழி திரைப்படம் தாய் கிழவியோடு மோதுவது குறித்து கலகலப்பாக பேசியிருக்கிறார்.
நடிகராக ஜொலித்துவரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திவருகிறார். தனது நிறுவனத்தின் மூலம் தரமான படைப்பாளிகளை அறிமுகம் செய்து; அருமையான படங்களை கொடுத்துவருகிறார். அவர் தயாரித்த கொடுக்காளி படமெல்லாம் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் தயாரித்திருந்த கனா திரைப்படமும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் தயாரிப்பாளராகவும் சக்சஸ்ஃபுல்லாக மாறியிருக்கிறார்.

ராதிகா நடிப்பில் தாய் கிழவி: அவர் இப்போது ராதிகா நடிப்பில் தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். இதனை சிவக்குமார் முருகேசன் இயக்கியிருக்கிறார். இவர்தான் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதையாசரியர் என்பது நினைவுகூரத்தக்கது. இப்படத்தில் ராதிகாவுடன் அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி, ஜார்ஜ் மரியான் என பலர் நடித்திருக்கிறார்கள். வரும் 27ஆம் தேதி படமானது தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.
நேற்று வெளியான ட்ரெய்லர்: இப்படத்தின் போஸ்டர் வந்தபோதே அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அடுத்ததாக வெளியான க்ளிம்ப்ஸும் பட்டாசாக இருந்தது. சூழல் இப்படி இருக்க நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அது படத்தின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆர்ட் ஃபிலிமாக மட்டுமில்லாமல் ஜனரஞ்சகமாக படம் உருவாக்கியிருக்கிறது என்பதை படத்தின் ட்ரெய்லர் உறுதி செய்திருக்கிறது. கண்டிப்பாக ஹிட்டடிக்கக்கூடிய அத்தனை அறிகுறிகளும் ட்ரெய்லரில் தெரிகிறது.
ட்ரெய்லர் வெளியீட்டு விழா: இந்நிலையில் நேற்று சென்னையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ராதிகா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். மேலும் சரத்குமார், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் நேற்றைய விழாவில் சரத்குமார் பேசியது அனைவரையும் கலகலப்பாக்கியிருக்கிறது.
சரத்குமார் பேச்சு: அவர் பேசுகையில், "தாய் கிழவி திரைப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி ரிலீஸாகும் என சொன்னார்கள். உடனே என்னை வைத்து ஆழி படத்தை இயக்கியிருக்கும் மாதவ் ராமதாஸிடம் சென்று தாய் கிழவி படத்தின் ப்ரோமோஷன் எல்லாம் அதிரிபுதிரியாக இருக்கும். அந்தப் படத்தோடு நாம் மோதுவதே தவறு. ஒதுங்கிக்கொள்வதுதான் நல்லது. எனவே நாம் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என கூறினேன். ஆனால் விதியின் கோலம், அவர்களும் 27ஆம் தேதிக்கு மாற்றிவிட்டார்கள். உன்னை நான் விடுவேனா பின்னாலேயே வந்து மோதுவேன் என்பது போல் வருகிறார்கள். இது மோதல் இல்லை ஒரு சாதனை என்று சொல்ல வேண்டும்.
படங்கள் ஹிட்: பிப்ரவரி 25 1994ஆம் ஆண்டு அரண்மனை காவலன், கேப்டன் இரண்டு படங்களும் ரிலீஸாகின. அந்த இரண்டு படங்களுமே நூறு நாட்கள் ஓடின. அதற்காக ஆழி 100 நாட்கள் ஓடும் என்று சொல்லவில்லை. தாய் கிழவி நூறு நாட்கள் ஓட வேண்டும். ஏனெனில் எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது மாதிரி" என்றார்.


Click it and Unblock the Notifications