Amaran Official Box Office: 200 கோடிகளை அள்ளிய சிவகார்த்திகேயனின் அமரன்.. அதிரும் கோலிவுட்!
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டினைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இதற்கு முன்னர் இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் விமர்சனம் மற்றும் வசூல் வெற்றிப் படமாக மாறியுள்ளது. படம் வெளியாகி 10 நாட்களில் ரூபாய் 200 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அமரன் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்று உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படம் ஏற்கனவே கூறியதைப்போல் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். மேலும் இவர் மிகவும் அதிகமான தமிழ் பற்று கொண்டவர்.

படத்தின் கதையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்து, ஒப்புதல் பெற்ற பின்னர், இந்திய ராணுவத் தளவாடங்களில் படம் எடுக்கப்பட்டுள்ளது. பல காட்சிகளில் இந்திய ராணுவ வீரர்களே காண்பிக்கப்பட்டுள்ளனர். படம் பார்த்த இந்திய ராணுவ வீரர்கள், தமிழ் நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் படத்தினைப் பாராட்டினர்.
எதிர்ப்பு: அதேநேரத்தில் படத்திற்கு அரசியல் தலைவர்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மே 17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி அமரன் படத்திற்கு கண்டனம் தெரிவிக்க தனி செய்தியாளர் சந்திப்பையே நடத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவத்தில் எப்படி ஜெய் பஜ்ரங்க் பலி என கோஜமிடப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், காஷ்மீரிகள் குறித்து தவறாக சித்தரிக்கும் படத்தினை ஆதரிக்க முடியாது எனக் கூறினார்.

பாக்ஸ் ஆபிஸ்: இப்படியான நிலையிலும் படத்திற்கு மக்கள் மத்தியில் கமர்ஷியலாக வரவேற்பு கிடைத்தது. படம் முதல் நாளில் ரூபாய் 42.3 கோடிகளை வசூல் செய்தது. இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு நாளுக்கு நாள் காட்சிகள் அதிகரிக்கப்பட்டதால் வசூல் சிறப்பாக இருந்தது. படம் மூன்றே நாட்களில் ரூபய் 100 கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது.
200 கோடிகள் வசூல்: முதல் நாள் வசூலைத் தெரிவித்த பின்னர் படக்குழு கப் சிப் மோடில் இருந்தது. இதனால் படம் முதல் வார இறுதி நாட்களுக்குப் பிறகு பெரிதாக ஓடவில்லையோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஆனால் படம் 10 நாட்களில் ரூபாய் 200 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரூபாய் 200 கோடிகளை வசூல் செய்த முதல் படம் என்ற சிறப்பினையும் இந்தப் படம் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.



Click it and Unblock the Notifications











