நா. முத்துக்குமார் குடும்பத்துக்கு உதவி செய்தேனா?.. என் ஆசை அதுதான்.. உண்மையை கூறிய சிவகார்த்திகேயன்
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நா. முத்துக்குமார் Welfare Core கமிட்டியோடு இணைந்து ஏசிடிசி நிறுவனம் ஒருங்கிணைத்திருந்தது. இதில் ஷங்கர், பாக்யராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ், ராம், மோகன் ராஜா, கார்த்திக் நேத்தா என பலரும் கலந்துகொண்டார்கள்.
தமிழ் சினிமா கண்டெடுத்த பாடலாசிரியர்களில் நா. முத்துக்குமார் முக்கியமானவர். பாலுமகேந்திரா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு தனது பாதை இயக்குநர் சீட்டை நோக்கி இல்லை; பாடலாசிரியர் இருக்கையை நோக்கியது என்பதை கண்டுபிடித்து வீரநடை படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். முதல் பாடலுக்கு பிறகு சில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. இருப்பினும் அவரை உச்சம் கொண்டு சென்றது காதல் கொண்டேன் திரைப்படம். அப்படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.
எளிமையான கவிஞர்: அந்தப் படத்துக்கு பிறகு முத்துவுக்கு வாய்ப்புகள் கொட்ட ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திய அவர்; தான் எழுதும் பாடல்களை எளிமையாகவும் அதே சமயம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வலிமையாகவும் கொடுத்தார். இதன் காரணமாக எளிமையான கவிஞர் என்ற பெயரையும் பெற்றார் அவர். அதுமட்டுமின்றி ஒரே வருடத்தில் அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற அந்தஸ்தை தொடர்ந்து 3 வருடங்கள்வரை தக்க வைத்திருந்தார்.
உயிரிழந்த முத்துக்குமார்: மற்ற பாடலாசிரியர்களைவிடவும் இளைஞர்களிடம் ரொம்பவே ஈர்ப்பு மிகுந்த கவிஞராக வலம்வந்துகொண்டிருந்த அவர் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துவந்த அவர்; கடந்த 2016அம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையுமே அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.

ஆனந்த யாழை இசை நிகழ்ச்சி: சூழல் இப்படி இருக்க ஏ.எல்.விஜய், ராம், அஜயன் பாலா என பலர் இருக்கும் நா. முத்துக்குமார் Welfare Core கமிட்டி சார்பில் நா. முத்துக்குமாரின் 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும்விதமாகவும்; அவரை கௌரவிக்கும் விதமாகவும், 'ஆனந்த யாழை' என்ற இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
குவிந்த திரையுலகம்: அறிவித்தபடி நேற்று அந்நிகழ்ச்சி நடந்தது. இதில் பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, மாரி செல்வராஜ், ராம், மோகன் ராஜா, பாலா, சத்யராஜ், சிவகார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், தேவா, ஏ.எல்.விஜய், நக்கீரன் கோபால், கார்த்திக் நேத்தா, பவா செலுத்துரை, எழுத்தாளர் பாமரன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதில் ஹரிசரண், சித்தார்த், நிவாஸ் கே பிரசன்னா, ஸ்ரீகாந்த் தேவா, யுவன் உள்ளிட்டோர் நா. முத்துக்குமார் எழுதிய பாடல்களை மேடையில் பாடினர்.
சிவகார்த்திகேயன் பேச்சு: முத்துக்குமாரின் மனைவி ஜீவலட்சுமி, மகன் ஆதவன், மகள் மகாலட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டார்கள். அக்குடும்பத்துக்கு குடியிருப்பு ஒன்றும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "நான் முதன்முதலில் பாடல் எழுதியபோது ஜாலியான பாடலாகத்தான் எழுதினேன். அந்த வரிகளில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் நான் பார்த்த வேலை அர்த்தமாக வேண்டும் என்று நினைத்தேன்.
உதவி இல்லை கடமை: அதனால்தான், பாடல் எழுதியதற்கு பணம் கொடுங்கள். நான் சென்று பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இது உதவி இல்லை. என்னுடைய கடமை. இந்த நிகழ்வுகூட அவரது குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக இல்லை. அவர் ரசிகர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள் என பலருக்கு சிறந்த விஷயங்களை கொடுத்திருக்கிறார். எனவே அவருக்கு திருப்பி நன்றிக்கடன் செய்யும் விஷயம்தான். நா. முத்துக்குமார் சாரை ரொம்ப மிஸ் செய்கிறோம். அவர் மாதிரி எழுதுவதற்கு இன்னொரு ஆள் இல்லை. என்னுடைய ஆசை எல்லாம் அவரது திறமை அவரின் மகனுக்கும் இருக்க வேண்டும். ஆதவனும் பாடல் எழுத வேண்டும். இதை நான் பிரெஷராக போடவில்லை. அந்த திறமை ஆதவனின் ரத்தத்திலேயே இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











