Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெட்ச் போட்ட பிரம்மாண்ட இயக்குநர்.. மெகா கூட்டணியில் SK 25!
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 13ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயனின் 25 படத்தின் இயக்குநர் பற்றிய அப்டேட் வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது.
மெகா கூட்டணியில் SK 25
சின்ன திரை வழியாக சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், பாக்ஸ் ஆபிஸில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக மாஸ் காட்டினார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக பெரிய பேனர் தயாரிப்பு நிறுவனங்களும் சிவகார்த்திகேயன் படங்களை தயாரித்து வருகின்றன. அதேபோல் அவரும் சொந்தமாக படங்களை தயாரித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் 100 கோடி வசூலித்தது. அதனைத் தொடர்ந்து டான் திரைப்படம் 125 கோடி வரை கலெக்ஷன் செய்தது. நடுவில் பிரின்ஸ் திரைப்படம் மட்டுமே தோல்வி அடைந்தது. அதனையடுத்து இந்தாண்டு ரிலீஸான மாவீரன் 90 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்தது. இந்நிலையில் தற்போது எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதனிடையே பொங்கல் ஸ்பெஷலாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயனின் முதல் சயின்ஸ் பிக்ஷன் படமாக அயலான் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் எஸ்கே 25 படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது கமலின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். இதனைத் தொடர்ந்து விஜய் படத்தை ஷங்கர் இயக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது ஷங்கரின் ஹீரோ லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளாராம்.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். அதிதியின் இரண்டாவது படமான மாவீரன், அவருக்கு நல்ல ரீச் கொடுத்திருந்தது. முன்னதாக மாவீரன் பட பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கரும் கலந்துகொண்டார். அப்போது சிவகார்த்திகேயனும் ஷங்கரும் தனியாக பேசிக்கொண்டனர். அப்போதே இருவரும் ஒரு படத்தில் இணையலாம் என பேசிக் கொண்டதாக தெரிகிறது.
அதனடிப்படையில் சிவகார்த்திகேயனின் எஸ்ஜே 25 படத்தை ஷங்கர் இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடித்துவிட்டு, அடுத்து குட்நைட் இயக்குநருடன் எஸ்கே 24ல் இணைகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களும் முடிந்த பின்னர் சிவகார்த்திகேயன் - ஷங்கர் காம்போவில் எஸ்கே 25 உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











