Sivakarthikeyan: அடிப்பதை போல பாய்ந்து வந்த இளைஞர்... மேடையிலேயே பதறி ஓடிய சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக அயலான் திரைப்படம் வெளியானது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 75 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை தெலுங்கு ரசிகர் ஒருவர் அடிக்க பாய்ந்து வருவதை போல வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனை பதற வைத்த இளைஞர்
மாவீரனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த அயலான் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்குப் போட்டியாக வெளியான அயலான், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் இரண்டு நாட்களில் கேப்டன் மில்லரை விட பின் தங்கியிருந்த அயலான், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் அயலான் திரைப்படம் இதுவரை 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியான அயலான் மேக்கிங், கிராபிக்ஸ் ஆகியவை ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். தமிழ் மட்டும் இல்லாமல் அயலான் படத்துக்கு தெலுங்கிலும் நல்ல சக்சஸ் கிடைத்துள்ளது.
முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற அயலான் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்றிருந்தார். அப்போது ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டைப் போல ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிரின்ஸ், மாவீரன் படங்கள் நேரடியாக தெலுங்கில் ரிலீஸாகின.
இதனால் ஹைதராபாத்தில் நடைபெற்ற அயலான் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியிலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குவிந்திருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டிருக்க, கீழே இருந்த ரசிகர் ஒருவர் பவுன்ஸர்களை ஏமாற்றிவிட்டு தாவி குதித்து மேடையில் ஏறினார். அதேவேகத்தில் அவர் ஓடி வருவதை பார்த்து பதறிப் போன சிவகார்த்திகேயன், பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓட்டம் எடுக்கப் பார்த்தார்.
ஆனால், பவுன்சர்கள் உடனடியாக வந்து அந்த ரசிகரை சுற்றி வளைத்தனர். அவரோ சிவகார்த்திகேயனுடன் ஒரேயொரு செஃல்பி எடுக்க தான் மேடைக்கு வந்தேன் என சொன்னதும் தான் அங்கிருந்தவர்கள் அமைதியாகினர். இதனைப் பார்த்த சிவகார்த்திகேயன் அந்த ரசிகரின் தோளில் கையை போட்டு செஃல்பிக்கு போஸ் கொடுத்தார். இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பதறி ஓட பார்த்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம் அவர் ரசிகருடன் செஃல்பி எடுத்துக் கொண்டதையும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











