Sivakarthikeyan: "தனுஷ் எப்பவுமே எனக்கு ஸ்பெஷல் தான்..” சிவகார்த்திகேயன் சொன்ன அந்த ஒரு பாயிண்ட்!
சென்னை: சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், தற்போது லீடிங் ஹீரோவாக வலம் வருகிறார். சிவாவின் ஆரம்பகால கேரியரில் அவருக்கு தனுஷ் ரொம்பவே உதவினார். இணை பிரியாத நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பேசிக்கொள்வது கிடையாது. இந்நிலையில் தனுஷ் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் சொன்ன ஒரு பாயிண்ட்
தமிழ்த் திரையுலகில் இன்றைய டாப் ஹீரோக்களின் லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனின் பெயரை தவிர்க்கவே முடியாது. குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளார் சிவா. விஜய் டிவி வழியாக மக்களிடம் பிரபலமான அவருக்கு மெரினா தான் முதல் படமாக அமைந்தது. அதேநேரம் தனுஷும் தனது 3 படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் தனுஷின் நண்பராக காமெடியில் கலக்கியிருந்தார் சிவகார்த்திகேயன். அதன் பின்னர் சிவகார்த்திகேயனை சிங்கிள் ஹீரோவாக்கி அழகுப் பார்த்ததும் தனுஷ் தான். சிவகார்த்திகேயனுக்காகவே எதிர்நீச்சல் படத்தை தயாரித்து அவரை ஹீரோவாக நடிக்க வைத்தார். அதன் பின்னர் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றது சிவகார்த்திகேயனின் மார்க்கெட்.
இன்னொரு பக்கம் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் உள்ளிட்ட சிலர் கோலிவுட்டில் தனி கேங்காக வலம் வந்தனர். முக்கியமாக தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பு ரசிகர்களையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் திடீரென இருவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட, அதன்பின்னர் பேசிக்கொள்வதே கிடையாது. சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து இன்னொரு படம் தயாரிக்க நினைத்தாரம் தனுஷ். ஆனால் தனுஷிடம் சிவா அதிக சம்பளம் கேட்டதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இப்போது வரை தங்களுக்குள் என்ன பிரச்சினை என்பதை தனுஷோ அல்லது சிவகார்த்திகேயனோ பொதுவெளியில் பேசிக்கொண்டது இல்லை. இந்நிலையில் இந்தாண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லரும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை பதற வைத்தது. இதில் கேப்டன் மில்லரை விட அயலானுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் தனுஷ் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனுஷும் நானும் பேசிக்குறதே இல்லன்னு நிறைய பேர் சொல்றாங்க. அப்படிலாம் ஏதும் இல்லை, எங்களுக்குள் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகளே கிடையாது. நான் எவ்ளோ ஜெயிச்சாலும் தனுஷை தாண்டிட்டேன்னு நினைக்கவே மாட்டேன். அவரு என்னைக்குமே பெருசு, எப்பவுமே எனக்கு ஸ்பெஷல் தான். அது எப்பவுமே மாறாது. எனக்கு ரெண்டு படம் ஓடிடுச்சுன்னு தனுஷ் சார தாண்டிட்டேன்னு நினைக்கவே மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் பேசிய இந்த வீடியோ ரெமோ படத்தின் ரிலீஸின் போது எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. த்ரோபேக் வீடியோவான இதனை ஷேர் செய்து வரும் ரசிகர்கள், இப்போது எல்லாம் மாறிவிட்டதே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











