இந்தியன் 2வுக்கு நோ சொன்ன சிவகார்த்திகேயன்! சித்தார்த்துக்குச் சென்ற வாய்ப்பு! தீயாக பரவும் செய்தி!
சென்னை: தமிழ் சினிமாவே தற்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் படம் என்றால் அது உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தியன் 2 படம்தான். இந்த படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தினை முதல் பாகமாகக் கொண்டு அதன் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தினை லைகா புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தில் இருந்து ஏற்கனவே பாரா மற்றும் கதறல்ஸ் என இரண்டு பாடல்கள் வெளியானது. இதில் பாரா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் கதறல்ஸ் பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் நேற்று அதாவது ஜூன் 25ஆம் தேதி படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. படத்தின் ட்ரைலரில் கமல் பல்வேறு கெட்டப்புகளில் வருவதால் பலரையும் ட்ரைலர் ஈர்த்துள்ளது. மேலும் ட்ரைலரில் அனிருத்தின் இசை கவனிக்கும்படியாக இருந்ததால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தில் பல்வேறு கலைஞர்கள் நடித்திருந்தாலும், படத்தில் நடித்த நெடுமுடி வேணு, விவேக் மற்றும் மனோபாலா ஆகியோர் மறைந்து விட்டனர். இவர்கள் மூவரையும் சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார். படத்தில் மூவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், இவர்களது கதாபாத்திரங்கள் எவ்வாறு கையாளப்பட்டு இருக்கின்றன என்பதை படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர்தான் பார்க்க முடியும்.
இந்தியன் 2: இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் புரோமோஷன் வேலைகள் சென்னை, மும்பை என இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நடத்த படக்குழு திட்டமிட்டு அதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனராம்.

சிவகார்த்திகேயன்: இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது என்னவென்றால், இந்தியன் 2 படத்தில் சித்தார்த் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க படக்குழு சிவகார்த்திகேயனைத்தான் அணுகியுள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயனிடம் சரியான தேதிகள் இல்லாததால் அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு மனதிற்குள் உலகநாயகன் கமல் ஹாசன் படத்தில் நடிக்கு வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விட்டதே என மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். அதன் பின்னர்தான் தனது மன வருத்தத்தைப் போக்க, கமல்ஹாசனின் ராஜ் கமல் புரெடக்ஷன்ஸில் அமரன் படத்தில் நடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது எனவும் பேசப்படுகின்றது.

இதுவும் ஒரு காரணம்: மேலும் இந்தியன் 2 படத்திற்காக தாடியை சேவிங் செய்யவேண்டும் என்பதாலும் தான் ஏற்கனவே நடித்துவரும் படங்களின் கண்டினுட்டி மிஸ் ஆகிவிடும் என்பதாலும் இந்தியன் 2 படத்தின் வாய்ப்பினை வேறு வழியில்லாமல் சிவகார்த்திகேயன் வேண்டாம் எனக் கூறினார் எனவும் கூறப்படுகின்றது. தன்னிடம் அணுகிய கதாபாத்திரத்தில் யார் நடிக்கின்றார் என படக்குழுவிடம் கேட்டுத் தொரிந்துகொண்ட சிவகார்த்திகேயன், நடிகர் சித்தார்த்திடம் இது தொடர்பாக பேசியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. அப்போது ஏற்பட்ட பழக்கம் இருவருக்குள்ளும் நல்ல பிணைப்பை ஏற்படுத்தியதால் சித்தார்த்தின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படமான, மிஸ் யூ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளிட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











