Amaran day 2 collection: சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் அமரன்... இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தீபாவளி ஸ்பெஷலாக தியேட்டரில் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை குவித்து வருகிறது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம். படம் முதல் நாளில் 42.3 கோடி ரூபாயை உலகம் முழுக்க வசூலித்து இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கும் நிலையில், இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது.மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

சிவகார்த்திகேயனின் அமரன்: படம் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமல் ஹாசன், முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார் என்பதை விட அவராகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதே போல,சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக நடித்துள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துவிட்டனர்.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் மனதைவிட்டு அகலாமல், அழ வைத்துவிட்டது. ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ள படம் சிவகார்த்திகேயன் கேரியரில் அமரன் திரைப்படம் பெரிய மைல் கல் என்றே சொல்லலாம். இதன்பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி விடும் என்பது நிச்சயம். ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக்கதை என்பதால் ரசிகர்கள் அதனுடன் ஒன்றி விடுகிறார்கள்.
அதிகாரப்பூர்வ வசூல்: மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அமரன் படத்தின் டிக்கெட் புக்கிங் சாதனைகளை நிகழ்த்தியிருந்தது. அமரன் இந்த ஆண்டின் ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கெட் புக்கிங் சாதனையை நிகழ்த்தியது. அமரன் படம் கேரளாவில் முதல் நாளிலேயே 1.26 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் முதல் நாளில் அதிக வசூலை அள்ளியது சாதனையாக பார்க்கப்படுகிறது. அதே போல, அவருக்கு என்று தெலுங்கு ரசிகர்களும் இருப்பதால், தெலுங்கிலும் நல்ல வசூலை பெற்று உள்ளதாக தகவல் வெளியான நிலையில், படக்குழு அமரன் படம் உலக அளவில் முதல் நாளில் 42.3 கோடியை வசூல் செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இரண்டாம் நாள் வசூல்: இதையடுத்து அமரன் படத்தின் இரண்டாம் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதாவது அமரன் படம் இரண்டாவது நாளில் உலக அளவில் 19.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டை பொறுத்தவரை காலை, மாலை,இரவு என அனைத்துக்காட்சிகளும் புக்காகி உள்ளதால், டிக்கெட் கிடைக்காமல் சினிமா பிரியர்கள் அலைந்துகொண்டு இருக்கின்றனர்..அதே போல நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் அமரன் படம் விலைவில் ரூ.100 கோடியைத் தாண்டும் என்று சினிமா நிபுணர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











