என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார் சிவா.
சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

வசூல் வேட்டை: முக்கியமாக தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தைவிட அயலான் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.
எதிர்பார்ப்பில் அமரன்: அயலான் படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் படத்தின் பெயர், டீசர், போஸ்டர்கள் என அப்டேட்டுகளாக குவிந்து ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி: அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் இரண்டு ஷெட்யூல்கள் முடிந்திருக்கின்றன. ருக்மிணி கதாநாயகியாக நடிக்கிறார். முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார். கண்டிப்பாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்.
மெகா பட்ஜெட்?: இந்நிலையில் சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்திருக்கும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 100லிருந்து 150 கோடி ரூபாய்வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை இதுதான் பட்ஜெட் எனில் சிவகார்த்திகேயனின் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்: சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்கிவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக சல்மான் கானை வைத்து இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதத்தில் தொடங்கும்படி சல்மான் கண்டிஷன் போட்டிருப்பதாகவும்; அதனால் சிவகார்த்திகேயன் படத்தை விரைவில் முடித்துவிட்டு முருகதாஸ் பாலிவுட் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











