Maaveeran: சர்வதேச அளவில் 75 கோடி ரூபாய் வசூலை தாண்டிய மாவீரன்.. மாஸ் அப்டேட்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது மாவீரன்.
மண்டேலா புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது.
படம் இரண்டு வாரங்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. சமீபத்தில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திலும் படக்குழுவினர் ஈடுபட்டனர்.

மாவீரன் படம் சர்வதேச அளவில் 75 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், கடந்த தீபாவளிக்கு வெளியான அவரது பிரின்ஸ் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் வெளியான மாவீரன் படம் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. மண்டேலா படம் மூலம் யதார்த்தமான கதைக்களத்தை கையாண்ட மடோன் அஷ்வின், இந்தப் படத்தில் வேறுமாதிரியான கதைக்களத்தை அணுகியுள்ளார்.
பயந்தாங்கொள்ளியான ஹீரோவிற்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவம் எப்படி அவரது வாழ்க்கையையும் அவரை சூழ்ந்தவர்களின் வாழ்க்கையையும் மாற்றுகிறது என்பதை கதைக்களமாக இந்தப் படம் கொண்டிருந்தது. படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா மற்றும் யோகிபாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். நீண்ட காலங்களுக்கு பிறந்த இந்தப் படத்தின்மூலம் சரிதா சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
மாவீரன் படத்தை முடித்துவிட்டு தனது எஸ்கே21 படத்தின் சூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றிருந்த சிவகார்த்திகேயன் அந்த சூட்டிங்கிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு மாவீரன் படத்தின் பிரமோஷனை மிகவும் சிறப்பாக செய்திருந்தார். அதேபோல படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திலும் காஷ்மீர் சூட்டிங்கிலிருந்து சென்னை வந்து பங்கேற்றார். அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்நிலையில் இந்தப் படம் கடந்த 11 நாட்களில் சர்வதேச அளவில் 75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் கேரியரில் குறைந்த நாட்களில் அதிகமான வசூலை ஈட்டியுள்ள படம் என்ற பெருமையையும் மாவீரன் பெற்றுள்ளது. இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய அற்புதமான ரசிகர்களுக்கு தயாரிப்புத்தரப்பு நன்றி தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் படத்தின் வசூல் 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவரது டாக்டர் மற்றும் டான் படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக அமைந்தன. இந்நிலையில் மாவீரன் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் விரைவில் இணையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் சந்தானம் உள்ளிட்டவர்களின் படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், வசூல் எப்படி அமையும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











