நீ குடிக்கிறியா? மக்களை குடிகாரர்களாக்கியது போதும்.. வாக்களித்த பின் சிவகுமார் பேட்டி!
சென்னை: தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,பொதுமக்கள் என அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் தி நகரில் உள்ள எம்ஜிஆர் பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். அப்போது, சிவக்குமார் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
குடிகாரர்களாக்கியது போதும்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்கள் ஆக்கியது போதும், தன் குடும்பத்தோடு சேர்ந்து கோடி கோடியாக சொத்துக்களை குவிக்காமல், கடை கோடி மனிதனின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் இதுதான் என்னுடைய வேண்டுகோள். மதுபான கடைகளை கலைஞர் தொடங்கியதில் அன்னையிலிருந்து நான் அதற்கு எதிரானவன். இதை செய்வார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், செய்தால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றார்.

டென்ஷனான சிவகுமார்: அப்போது ஒரு செய்தியாளர் ஒருவர், மதுவால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கு என நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் கடுப்பான சிவகுமார், குடிமக்களை குடிகார மக்களாக்கிட்டாங்கனு சொல்றேன் பாதிப்பானு கேட்குறீங்க, நீங்க குடிக்கிறீங்களா? கிட்டத்தட்ட 40% மக்கள் இந்த குடியால் நாசமாகி கொண்டு இருக்கிறார்கள் இதை மறந்துவிடாதீர்கள் என்றார். தொடர்ந்து இலவசங்கள் தேவையா என்ற கேள்விக்கு தேவை என சிவக்குமார் பதில் அளித்தார். சிவகுமார் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் டிரண்டாகி வருகிறது.
கிண்டலடித்த சத்யராஜ்: நடிகர் சத்யராஜ் நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு சாவடிவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், வாக்களித்துவிட்டேன். அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களித்தே என்று யாருக்கும் சொல்லிக்கூடாது. ஆனால், நான் யாருக்கு வாக்களிப்பேன் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த இடத்தில் இருந்து எதையும் பேசக்கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. அதற்காக நான் போனைக்கூட எடுத்துவரவில்லை, எதையாவது கேள்வி கேட்டு என்னை மாட்டிவிட்டுவிடாதீர்கள் என்று சத்யராஜ் சிரித்தபடி பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications