சிவக்குமாரை 'காத்த' போதிமரம்….!
சென்னை: நடிகர் சிவக்குமார் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் தனது பால்ய காலத்தில் தனக்குள் துளிர்த்த காதல் குறித்து தனது பாணியில் சுவாரஸ்யமாக சின்னதாக அழகாக எழுதியுள்ளார்.
திரையுலகின் மார்க்கண்டேயர் என்று செல்லமாக அழைக்கப்படும் சிவக்குமாரின் இந்த முதல் காதல் பூத்ததுமே மரித்துப் போன ஒன்று.
அது தோன்றிய விதம், மறைந்த விதத்தை தனது பாணியில் தனது வார்த்தைகளில் சிவக்குமார் கூறியிருப்பதைப் பாருங்கள்...

பள்ளிப் படிப்பு முடிந்ததும்
பள்ளிப் படிப்பு முடிந்தது. பருவ உணர்வு தலை தூக்கியது. அது காதலோ காமமோ அல்ல. அதற்கு முந்தைய நிலை.

கிறுக்குப் பிடித்த மாதிரி
பெண்களைப் பார்த்தாலே ஒரு குறுகுறுப்பு. சிலிர்ப்பு. கிறுக்கு பிடித்த மாதிரி, என் வயதொத்த ஒரு பெண் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.

சாதாரண பெண்
அவள் அழகியில்லை, படித்தவள் இல்லை. ஏழை. தினம் கூலி வேலைக்கு சென்று வயிறு வளர்க்கும் சாதாரணப் பெண்.

காந்தம் போன்ற குரல்
கவர்ச்சியான தோற்றமில்லை. ஆனால் அவள் குரல் காந்தம் போல் என்னைக் கவர்ந்தது.

ஏன் என்னிடம் வந்தாய்?
பல முறை ஆசைப்பட்டு, துணிந்து ஒரு முறை சந்தித்தேன். என்ன வேண்டும் என்றாள். சொல்லத் தெரியவில்லை. ஏன் என்னிடம் வந்தாய்? பதில் சொல்ல முடியவில்லை. சொல்லாமல் புரிந்து கொண்டாள்.

ஈ எறும்புக்கும் கூடத்தான் வரும்..போ!
"இதோ பார், வயசில எல்லோருக்கும் வர்ற ஆசை இது. ஈ எறும்புக்கும் வரும். நீ நல்லாபடிச்சி பெரிய ஆளா ஆனேன்னா 60 வயசுல கூட 20 வயசு அழகான பொண்ணு கெடைக்கும். போய் உருப்படற வழியப்பாரு"

சொடுக்கிய சாட்டை வலி
சிலையாக நின்றேன். அவள் சொடுக்கிய சாட்டை வலி உடம்பெல்லாம் பரவியது. நெடுநேரம் அந்தச் சுடுகாட்டுப் பக்கம் இரவில் நின்றேன்.

இழுத்து வைத்து அறுத்து விடுவது
மனதில் ஒரு வைராக்கியம்!! புலன்களிலே ஒன்று உபாதை செய்தால் அதை இழுத்து வைத்து அறுத்து விடுவது என்ற வெறியோடு சென்னை வந்தேன்.

போதிமரம் தந்த ஞானம்
இன்று 88 கதாநாயகிகளோடு கட்டி அணைத்துக் காதல் வசனம் பேசி நடித்தும் சலனங்கள், சபலங்கள் பட்டும் கீழே விழுந்து மூக்குடைபடாமல் காப்பாற்றியது, அந்த போதிமரம் தந்த ஞானம்.

3வது பிரசவத்தில் மறைந்த போதி மரம்
ஆனால், நான் சென்னை வந்த 4 ஆண்டுகளில் வயதான ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, வறுமையில் வாழ்ந்து, மூன்றாவது பிரசவத்தில் அந்த போதிமரம் உலகை விட்டு மறைந்துவிட்டதுதான் சோகம்.


Click it and Unblock the Notifications