SJ Suryah salary: இந்த டீல் நல்லா இருக்கே.. காசுக்கேத்த தோசை.. அதுவும் ஹீரோன்னா இப்படியொரு ஆஃபரா?
சென்னை: விஜய்சேதுபதிக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உருவாகி இருக்கிறது. இந்த இருவரும் நடிப்பில் மிரட்டி வந்தாலும், அவர்கள் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. ஆனால், வில்லனாக நடிக்கும் படங்கள் பேய் ஹிட் அடித்து வருகின்றன.
மாஸ்டர், விக்ரம், ஜவான் என விஜய்சேதுபதி ஒரு பக்கம் வெயிட்டு காட்டி வர, மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி என எஸ்.ஜே. சூர்யா இன்னொரு பக்கம் வில்லத்தனத்தில் வித்தைக் காட்டி வருகிறார்.

இந்தியன் 2 படத்திலும் இவர் தான் மெயின் வில்லனே எனக் கூறுகின்றனர். இந்நிலையில், வில்லனாக நடிக்க அதிக சம்பளத்தையும் ஹீரோவாக நடிக்க குறைவான சம்பளத்தையும் வாங்கும் முடிவுக்கு வந்து விட்டாராம் எஸ்.ஜே. சூர்யா என சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு அடிபட்டு வருகிறது.
நடிக்கத்தான் ஆசை: இயக்குநராக அறிமுகமாகி வாலி, குஷி என தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் கொடுத்தாலும் தனது நடிக்கும் ஆசை காரணமாக நியூ படத்தில் அவரே நடிக்க ஆரம்பித்த நிலையில், இன்றளவும் பல படங்களில் வித விதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.
நடிப்பு அரக்கன் என்றே மார்க் ஆண்டனி படத்தில் பட்டம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் மொத்த வெற்றிக்கும் காரணமாகவும் மணிமகுடத்தை சூட்டி மாஸ் காட்டியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
வில்லனாக நடிக்க இத்தனை கோடி: பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்க பெரிய பட்ஜெட் படம் என்றால் அதிகபட்சமாக 8 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி வருகிறாராம் எஸ்.ஜே. சூர்யா. அதே நேரத்தில் சிறு பட்ஜெட் படங்களிலும் வில்லனாக நடிக்க அழைத்தால் மாட்டேன் என சொல்லாமல், தயாரிப்பாளருக்கும் கஷ்டம் கொடுக்காமல் 5 கோடி கொடுத்தாலும் நடிக்க ஓகே சொல்லி வருகிறாராம்.
அதிரடி ஆஃபர்: ஆனால், அதை விட தன்னை ஹீரோவாக வைத்து படம் பண்ண யாராவது தைரியமாக துணிந்து முன் வந்தால், அவர்களின் மன தைரியத்தை பாராட்டி தனது சம்பளத்தை ஒட்டுமொத்தமாக வெறும் 3 கோடி கொடுத்தாலும் கழுதை குடிசையாக இருந்தாலும் நடிக்க ரெடி என்கிற லெவலுக்கு சம்பளத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து பக்காவாக டீல் செய்து வருகிறாராம். விட்டா காம்போ ஆஃபர் எல்லாம் கொடுப்பார் போல என பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











