இந்தியன் தாத்தாவுக்கு மட்டுமில்லை.. அந்த தாத்தாவுக்கும் எஸ்.ஜே. சூர்யா தான் வில்லனாம்!
சென்னை: இரும்புத்திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியாகி சரவெடியாக இருந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2ம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக கூறுகின்றனர்.
பார்ட் 2 படங்கள் என்றாலே லேசாக பயம் தொற்றிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகி வரும் சூழலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கொடுத்த நம்பிக்கை, அரண்மனை 4ம் பாகம் வெற்றிப் பெற்ற விஷயங்களையும் மறக்க முடியாது தான்.

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் 2 படத்தைத் தொடர்ந்து கைதி 2வில் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த படத்துக்கு முன்னதாக சர்தார் 2 சர்ப்ரைஸ் விருந்தாக கிடைக்க காத்திருக்கிறது.
இந்தியன் தாத்தாவுக்கு வில்லன்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஜெகன், சமுத்திரகனி, நெடுமுடி வேணு, விவேக், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஒரு மூன்று சீன்களில் கேமியோவாக வந்து செல்வார். இந்தியன் 3ம் பாகத்தில் வர்மக் கலையை இவரே கற்றுக் கொண்டு இந்தியன் தாத்தாவுக்கே வில்லனாக மாற காத்திருக்கிறார்.
சர்தார் தாத்தாவுக்கும்: இந்தியன் தாத்தாவுக்கு மட்டுமல்ல சர்தார் தாத்தாவுக்கும் எஸ்.ஜே. சூர்யா தான் வில்லன் என தற்போது எஸ்.ஜே. சூர்யாவை சர்தார் 2 படத்தில் ஆன்போர்டு செய்து இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களில் அர்ஜுனை வைத்து தரமான சம்பவம் செய்த பி.எஸ். மித்ரன் எஸ்.ஜே. சூர்யா போன்ற நடிப்பு அரக்கன் கிடைத்தால் நிச்சயம் அவருக்கான கதாபாத்திரத்தை செம ஸ்ட்ராங்காக வடிவமைத்து இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.
கார்த்தி செம பிஸி: மெய்யழகன், வா வாத்தியார் என 2 படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. மெய்யழகன் படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கியுள்ளார். வா வாத்தியார் படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். அந்த படத்தில் கார்த்தி ஜோதியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். அடுத்ததாக சர்தார் 2 படத்தை ஆரம்பித்து அதிர வைக்க காத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கைதி 2 படம் எப்போது பண்ணுவார் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











