திருமண மேடையில் மாரடைப்பால் சரிந்து விழுந்த ஸ்மிருதி மந்தனாவின் அப்பா.. திருமணம் ஒத்திவைப்பு!
மும்பை: பிரபல கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனா, திருமணத்திற்கு முன்பாகவே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் மற்றும் ஸ்மிருதி மந்தனா திருமணம் நவம்பர் 23 அன்று நடைபெறவிருந்த நிலையில், இந்த திடீர் நிகழ்வால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டிருந்த தனது மகளுடன் ஸ்ரீனிவாஸ் மந்தனா மகிழ்ச்சியுடன் காணப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ஒரு வீடியோவில், அவர் தனது மகளுக்காக 'குத்மாய்' பாடலுக்கு நடனமாடுகிறார். மற்றொரு வீடியோவில், 'நாரே நாரே' பாடலுக்கு அவர் உற்சாகமாக நடனமாடுவதைக் காணலாம். மேலும், ஒரு வீடியோவில் அவர் ஸ்மிருதியுடன் நடனமாடுகிறார்.
இந்த வீடியோக்கள் வெளியான பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்ட ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பு: சர்வஹித் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். நமன் ஷா, ஸ்ரீனிவாஸ் மந்தனாவின் உடல்நிலை குறித்து விளக்கமளித்தார். நவம்பர் 23 அன்று இரவு 11:30 மணியளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக சங்கலியில் உள்ள சர்வஹித் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவரது கார்டியாக் என்சைம்கள் சற்று அதிகரித்திருந்தாலும், தொடர் கண்காணிப்பு தேவைப்படுகிறது. இதய நோய் நிபுணர் டாக்டர். ரோஹன் தானேகர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
சிகிச்சை: டாக்டர். ஷா மேலும் கூறுகையில், அவருக்கு தொடர்ச்சியான இசிஜி கண்காணிப்பு மற்றும் தேவைப்பட்டால் ஆஞ்சியோகிராபி தேவைப்படலாம். தற்போது அவரது ரத்த அழுத்தம் சற்றுக் கூடுதலாக இருப்பதால், தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம். திருமணக் காலம் என்பதால் ஏற்படும் உடல் அல்லது மன அழுத்தத்தால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று டாக்டர். ஷா விளக்கினார்.
திருமணம் ஒத்திவைப்பு: தன்னுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டு இருந்த தனது அப்பா மாரடைப்பால் சரிந்தது, அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பதறிப்போன ஸ்மிருதி மந்தனா, தனது காதலன் இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலிடம் கலந்துரையாடி, தனது திருமணத்தை உடனடியாக ஒத்தி வைத்துள்ளார். இந்த சோகமான நிகழ்வ் ஸ்மிருதி மந்தனாவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











