IPL Final - அது அகமதாபாத்தா இல்லை கோடம்பாக்கமா?.. ஐபிஎல் ஃபைனலுக்கு படையெடுத்த கோலிவுட் நட்சத்திரங்கள்
சென்னை: IPL Final (ஐபிஎல் ஃபைனல்) அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இறுதிப்போட்டியை பார்ப்பதற்கு கோலிவுட் நட்சத்திரங்கள் சென்றனர். அதனை பார்த்த ரசிகர்கள் அது அகமதாபாத்தா இல்லை கோடம்பாக்கமா என கேள்வி எழுப்பினர்.
கடந்த ஒரு மாதமாக அனைவருக்குமே ஐபிஎல் காய்ச்சல் இருந்தது. தோனிக்கு இது கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் எப்படியாவது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் நினைத்தனர். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின. போட்டியானது அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது.

குறுக்கிட்ட மழை:
நேற்று முன் தினம் நடைபெற வேண்டிய போட்டி மழை காரணமாக நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இதனையடுத்து நேற்று டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதனையடுத்து, செம ஃபார்மில் இருக்கும் கில்லும், சஹாவும் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் ஜடேஜா ஓவரில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்ப்பிங்கில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வெளுத்த சுதர்சன்:
கில் அவுட்டான பிறகு சஹாவும், தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சனும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை நிதானமாகவே எதிர்கொண்டது. குறிப்பாக சுதர்சனின் பேட்டிங்கில் அனல் பறந்தது. எனவே குஜராத்தின் ரன் ரேட்டும் சீராக இருந்தது. சஹா 54 ரன்களில் ஆட்டமிழக்க சாய் சுதர்சன் 96 ரன்களில் வெளியேறினார். இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 214 ரன்களை எடுத்தது.

களமிறங்கிய சென்னை:
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது.முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ருத்துராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் மழை வந்து சோதனை செய்தது. அதனையடுத்து நள்ளிரவு 12.10 மணிக்கு 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. ருத்துராஜும், கான்வேவும் டீசண்ட்டான தொடக்கம் கொடுக்க, அம்பத்தி ராயுடுவும், ஜடேஜாவும் அதிரடி காட்ட கடைசி பந்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

குழுமிய கோடம்பாக்கம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பிரபலங்களும் அடக்கம். சென்னை அணியின் முக்கியமான ஆட்டம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று போட்டியை நேரில் பார்க்கக்கூடிய அளவுக்கு வெறிதனமான ரசிகர்கள். அந்தவகையில் நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சதீஷ், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் அகமதாபாத்தில் போட்டியை கண்டு ரசித்தனர்.
அதேபோல் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் தனது இரண்டு மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸி அணிந்தபடி போட்டியை கண்டு ரசித்தனர். இவர்கள் அனைவருமே போட்டியை சென்னை வென்றதும் கத்தி ஆராவாரம் செய்தனர். இத்தனை பேர் அகமதாபாத் சென்றதை பார்த்த ரசிகர்கள் அது அகமதாபாத்தா இல்லை கோடம்பாக்கமா என சமூக வலைதளங்களில் ஜாலியாக கமெண்ட்ஸ் செய்தனர்.


Click it and Unblock the Notifications











