கவர்ச்சிப் படத்துக்கேற்ற 'கன கச்சிதமான' கதையுடன்... சொல்ல மாட்டேன்!

அப்படித்தான் ஒரு படம் இப்போது உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பு சொல்ல மாட்டேன். எதைச் சொல்ல மாட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் படத்தின் கதையை மட்டும் படு சூப்பராக அமைத்துள்ளனர்.
அதாவது ஒரு சுற்றுலாத் தலம் இருக்கிறது.. நீங்கள் நினைப்பது சரிதான், அது ஒரு மலைப் பாங்கான பிரதேசம். அங்கு சுற்றுலாவுக்கு வரும் - நீங்கள் மறுபடியும் கெஸ் செய்தது சரிதான் - பெண்கள் மட்டும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.
அப்படிக் கொல்லப்பட்ட ஒரு கல்லூரி மாணவி ஆவியாக மாறி எதிரிகளைப் பழிவாங்கக் கிளம்புகிறாள். இதுதான் படத்தின் கதையாம். இப்படிப்பட்ட கதைகளை நிறைய நாம் கேள்விப்பட்டிருந்தாலும், இந்தப் படத்தில் அதை வித்தியாசமாக காட்டியுள்ளனராம் - இந்த வித்தியாசம் என்ற வார்த்தை கூட மாறாமல் ஒவ்வொருவரிடமிருந்தும் தவறாமல் வருவதையும் நாம் தொடர்ந்து பார்த்துதான் வருகிறோம்.
படத்தில் திரில்லும், கவர்ச்சியும் சம விகித சரிமானத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாம். படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஜிஸ்மி. படப்பிடிப்பை பாலக்காட்டுக்குப் பக்கத்தில் படு குளிரான ஒரு காட்டுப் பகுதியில் வைத்து நடத்தியுள்ளனர். படப்பிடிப்பின்போது கடும் குளிர் தாங்க முடியாமல் அவ்வப்போது ஜிஸ்மி மயங்கி விழுந்து விடுவாராம்... அவரைத் தெளிய வைத்து தெளிய வைத்து படப்பிடிப்பை நடத்தினார்களாம்.
அனேகமாக படம் வந்த பிறகு ஜிஸ்மியைப் பார்த்து ரசிகர்கள் மயங்கி விழுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


Click it and Unblock the Notifications