தினமும் ஒரு திருக்குறள்.. ட்விட்டரில் கலக்கும்.. சாலமன் பாப்பையா !
சென்னை :ட்விட்டரில் இணைந்துள்ள சாலமன் பாப்பையா, தினமும் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் ட்வீட் செய்து அகழ்வாரை தாங்கும் நிலம் போல என்ற குறளை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே என்றால் நம் நினைவிற்கு முதலில் ஞாபகம் வருவது சாலமன் பாப்பையா அவர்கள்தான். நம் சிறு வயது முதல் பல பட்டிமன்றங்களைபார்த்திருப்போம் குறிப்பாக சன் டிவியில் அதிகம் பார்த்திருப்போம். அந்த பட்டிமன்றங்கள் அனைத்திலும் நடுவில் ஒரு நாற்காலியில் அதிகமாக பார்த்த முகம் என்றால் அது நம் சாலமன் பாப்பையாதான். எனவேதான் திரைப்படங்களில் கூட அதிகம் நடிக்காவிட்டாலும் பலராலும் அறியப்படும் ஒருவராக இருக்கிறார்.

தமிழ் பேராசிரியராக பணிபுரிந்த இவர் தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் மிகவும் பிரபலமானவர். இவரின் அழுத்தமான குரலிற்காகவே பலரும் இவரின் நிகழ்ச்சியினை பார்ப்பதுண்டு. சமூக கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க நினைக்கும் இவர் சுமார் 12000க்கும் மேலான நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்தியுள்ளார். தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் புத்தகங்களையும் இயற்றியுள்ளார்.
தற்போது கொரோனா தொற்றால் ஊரடங்கு உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் வீட்டில் இருந்த படியே தங்களின் ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை சமூகவலைதளங்களின் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து திரு சாலமன் பாப்பையா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இவர் ட்விட்டரில் இணைந்து சில நாட்களே ஆன நிலையில் மக்களுக்கு ட்விட்டர் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார். சமீபத்தில் அன்பு தாய்மார்களே என்று ஆரம்பித்தவாறு ட்வீட் ஒன்றை பதிவிட்டு ட்விட்டரில் இணைந்தார்.

அதே போல் தற்போது தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் ட்வீட் செய்துள்ளார். பொதுவாக திருக்குறள் என்றாலே ஜாதி மத பேதம் எல்லாவற்றையும் தாண்டிய உலக பொதுமறை நூலாகும். சாதாரண மக்களுக்கே திருக்குறள் மேல் பற்று இருக்கும்போது தமிழ் பேராசிரியருக்கு இருக்காதா! எப்படி எல்லா சூழ்நிலைகளுக்கும் வடிவேலு காமெடி பொருந்துமோ அதே போல் காலம் தாண்டிய பல கேள்விகளுக்கு பதில் திருக்குறளில் எப்போதும் உண்டு.

இந்த லாக்டவுன் நேரத்தில் பலருக்கும் திருக்குறள் ஒரு பாசிட்டிவிட்டியை உருவாக்கும் என்ற நோக்கத்தோடு திருக்குறளை ட்வீட் செய்துள்ளார். இவர் அகழ்வாரை தாங்கும் நிலம் போல என்ற குறளை பதிவிட்டுள்ளார். அது மக்களுக்கு பொறுமையை எடுத்துரைக்கும் குறளாகும், அது மட்டுமில்லாமல் இந்த சூழ்நிலைக்கு ஏற்றார் போல உள்ளதால் அதை பதிவிட்டுள்ளார்.
பல பட்டிமன்றங்களில் நடுவராக பொறுப்பேற்ற இவரை தமிழ் சினிமாவிலும் சிவாஜி படத்தில் அங்கவை, சங்கவை என்ற காமெடி காட்சியிலும் நாம் பார்த்து ரசித்து இருப்போம். மேலும், இவர் பாய்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











