சூரியின் சகோதரர் எனது கடை புகுந்து திருடிவிட்டார்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
சென்னை: நடிகர் சூரி காமெடியனாக தனது பயணத்தை திரைத்துறையில் ஆரம்பித்து இப்போது வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் நடிப்பு மட்டுமின்றி மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஹோட்டலையும் நடத்திவருகிறார். அந்த ஹோட்டலை அவரது சகோதரர்கள் நிர்வாகம் செய்துவருகிறார்கள். இந்தச் சூழலில் சூரியின் சகோதரர்களில் ஒருவரான லட்சுமணன் மீது முத்துச்சாமி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் சூரிக்கு மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அதற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து காமெடியனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அடையாளப்பட்ட சிறிது காலத்திலேயே முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்தை அவர் அடைந்துவிட்டார். இப்படிப்பட்ட சூழலில்தான் அவர் கதையின் நாயகனாக மாறினார்.
வெற்றிமாறன் பட்டறை: எந்த ஒரு நடிகருக்குமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. அது சூரிக்கு விடுதலை படத்தில் நிறைவேறியது. அதுவரை காமெடியனாக இருந்த அவரை விடுதலை படத்தில் கதையின் நாயகனாக மாற்றினார் வெற்றி. படம் சூப்பர் டூப்பர் ஹிட். சூரிக்கும் மிகப்பெரிய வரவேற்பு. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக மட்டும் நடிப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் சூரி. அதற்கு தகுந்தபடிதான் அவரது படங்களும் ரிசல்ட்டை கொடுக்கின்றன.
வரிசையாக ஹிட்டுகள்: விடுதலை படத்துக்கு பிறகு அவர் நடித்த கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவற்றில் கொட்டுக்காளியும் விடுதலை 2வும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. கருடன் திரைப்படமோ அவருக்கு வசூல் ரீதியாக பெரிய ரெஸ்பான்ஸை கொடுத்தது. கடைசியாக அவர் நடித்த மாமன் திரைப்படம்கூட பக்கா ஹீரோ மெட்டீரியல் பேக்கேஜாக அவருக்கு அமைந்துவிட்டது. படம் தோல்வி படம் என்ற பெயர் வாங்காமல் சுமார் என்ற ரகத்தில் இருந்தது. இப்படி கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் தொடர்ந்து பாசிட்டிவ் நோட்டில் போய்க்கொண்டிருப்பதால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அம்மன் உணவகம்: இதற்கிடையே அவர் தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் உணவகம் என்ற ஒன்றை நடத்திவருகிறார். சைவ உணவகமான அதனை அவரது சகோதரர்கள்தான் நிர்வகித்துவருகிறார்கள். மதுரைக்கு செல்லும் செலிபிரிட்டிகள் தவறாமல் அந்த ஹோட்டலில் ஒரு அட்டென்டென்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் சூரியின் சகோதரர்களில் ஒருவரான லட்சுமணன் மீது முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
என்ன புகார்: அவர் அளித்த புகாரில், "நான் மதுரையில் அலைகள் என்ற பெயரி கடந்த 20 வருடங்களாக அச்சகம் ஒன்றை நடத்திவருகிறேன். எனது அச்சகத்துக்கு பக்கத்தில்தான் அம்மன் உணவகம் இருக்கிறது. இந்த ஹோட்டலில் வாகனங்கள் நிறுத்துமிடம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பல முறை நான் சூரியின் சகோதரர் லட்சுமணனிடம் கூறி பார்த்துவிட்டேன்.
திருடிவிட்டார்: ஆனால் எந்தப் பலனும் இல்லை. சூழல் இப்படி இருக்க அவர் எனது கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் வந்து பணம் மற்றும் முக்கியமான ஆவணங்களை திருடி சென்றுவிட்டார். மேலும் மாடிக்கு செல்லும் வழியையும் பூட்டியிருக்கிறார். அந்த இடத்தையும் ஆக்கிரமிக்க பார்க்கிறார். இந்த அத்துமீறல் எல்லாம் சூரிக்கு தெரிந்துதான் நடக்கிறத என்பது தெரியவில்லை. லட்சுமணன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











