என் தென்னிந்திய திரைப்பயணம் ரஜினியுடன் ஆரம்பமாவது மகிழ்ச்சி!- சோனாக்ஷி
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் என் தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.
'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்தான தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

இரண்டு நாயகிகள்
கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ள படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு என்றும் அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.

ரஜினி தயக்கம்
சோனாக்ஷி சின்ஹா இந்தியில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார். இவருக்கு வயது 27. தன்னை விட மிகவும் வயது குறைந்த சோனாக்ஷியுடன் நடிப்பதற்கு ரஜினி முதலில் தயக்கம் காட்டினார்.

கதையில் மாற்றம்
ஆனால் ரஜினி - சோனாக்ஷி ஜோடியை நியாயப்படுத்துவது மாதிரி கதையில் சில மாறுதல்களை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் செய்த பிறகு ரஜினி சம்மதம் தெரிவிக்க, அதன் பிறகே சோனாக்ஷியிடம் பேசினார்களாம். அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

சோனாக்ஷி மகிழ்ச்சி
இதுகுறித்து சோனாக்ஷி தனது ட்விட்டரில், "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் படத்தின் மூலம் எனது தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவது மகிழ்ச்சியாக உள்ளது," என கூறியுள்ளார்.

பேட்டி
பின்னர் மும்பையில் அளித்த பேட்டியில் இந்தப் படத்தில் தான் நடிப்பது குறித்து இப்படி கூறியிருந்தார்: "ஒரு வழியாக தென்னிந்திய மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். எனது முதல் படமே சிறந்த படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரஜினி சாருக்கு ஜோடியாக ஒரு நல்ல கதையில் நான் நடிக்க இருக்கிறேன். இப்படத்தினைத் தொடர்ந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











