மாநகராட்சி நோட்டீஸை ரத்து செய்யக் கோரி.. நடிகர் சோனு சூட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
மும்பை: நடிகர் சோனு சூட் தனக்கு எதிரான மும்பை மாநகராட்சியின் நோட்டீசை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார்.
பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் கொரோனா காலகட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தார்.
அதாவது, கொரோனாவுக்காக கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் நிலைகுலைந்தனர்.

தொழிலாளர்கள்
பலர் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில், சோனு சூட், அவர்கள் சொந்த ஊர் செல்ல, உதவி செய்து வந்தார். கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை கொடுத்தார்.

மக்கள் பாராட்டினர்
அவருடைய மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர். அவர் இப்போதும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.

குடியிருப்பு பகுதி
அவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் உதவிகளைப் பாராட்டி தெலங்கானாவில் அவருக்குக் கோயில் கட்டியுள்ளனர். இந்நிலையில், மும்பையில் ஜூஹூ பகுதியில் அவர் நடத்தி வரும் ஓட்டல், குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகிறது. அங்கு அவர் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கடந்த ஆண்டு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

சோதனை நடத்தினர்
இதை எதிர்த்து அவர் மும்பை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சோனு சூட் கட்டிடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். பின்னர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு
அதில், முறையான அனுமதி பெறாமல் குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுபற்றி நடிகர் சோனு சூட்டிடம் கேட்டபோது, முறையான அனுமதி பெற்றுதான் ஓட்டல் இயங்கி வருகிறது என்றார்.

சட்டத்தை மதிப்பவன்
'மும்பை மாநகராட்சியில் அனுமதி பெற்றுவிட்டேன். மும்பை கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தில் ஒப்புதல் பெற வேண்டி இருக்கிறது. அதற்கு விண்ணப்பித்திருக்கிறேன். கொரோனா காரணமாக, அனுமதி இன்னும் வரவில்லை. இதில் எந்த முறைகேடும் இல்லை. நான் சட்டத்தை மதிப்பவன் என்று கூறி இருந்தார்

ரத்து செய்ய கோரி
இந்நிலையில் நடிகர் சோனு சூட் தனக்கு எதிரான நோட்டீசை ரத்து செய்ய கோரியும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். அதில், மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு செய்யும் வகையில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











