உயிரைக் காப்பாற்ற இரவு பகல் உழைப்பு..கொரோனா வாரியர்ஸுக்கு தனது ஓட்டலை ஒதுக்கிய வில்லன் நடிகர்!
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினர் ஓய்வெடுத்துக் கொள்ள, தனது ஆறு மாடி ஓட்டலை வழங்க முன் வந்துள்ளார் பிரபல வில்லன் நடிகர்.
Recommended Video
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், இப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் ஏராளமானார் உயிரிழந்துள்ளனர்.

தீவிர நடவடிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக உயர்ந்துள்ளது, 149 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ஷாருக்கான்
இந்நிலையில், மும்பையில் உள்ள தனது நான்கு மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார், பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக் கான். நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் மையமாக மாற்றி அமைக்க, பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன் அவர் அறிவித்தார். இது தொடர்பாக மும்பை மாநகராட்சிக்குத் தெரிவித்து இருந்தார்.

நடிகர் சோனு சூட்
இதையடுத்து, பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்-டும் உதவ முன் வந்துள்ளார். இவர் மும்பை ஜுஹு பகுதியில், ஆறு மாடியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இதை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையினர் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு வழங்க முன் வந்துள்ளார். மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள் இங்கு ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

கொரோனா வாரியர்ஸ்
இதுபற்றி சோனு சூட் கூறும்போது, மக்களின் உயிரைக் காப்பாற்ற இரவும் பகலும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு... அந்த கொரோனா வாரியர்ஸுக்கு என்னால் ஆன உதவியை செய்வது பெருமை. அவர்கள் மும்பையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஓய்வெடுக்க இடம் தேவை என்பதால் கொடுக்க முன் வந்துள்ளேன். மும்பை மாநகராட்சி மற்றும் சில தனியார் மருத்துவமனைகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.

அருந்ததி வில்லன்
நடிகர் சோனு சூட், விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அருந்ததி படத்தில் இவரது வில்லன் நடிப்பு பேசப்பட்டது. இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள இவர், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











