ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்.. 'லாக்டவுன் ஹீரோ' சோனு சூட்-டை அடிக்க தயங்கிய பிரபல ஹீரோ சிரஞ்சீவி!
சென்னை: நடிகர் சோனு சூட்-டை அடிப்பதற்கு பிரபல ஹீரோ மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இவர் தமிழில் கள்ளழகர் படம் மூலம் வில்லனாக அறிமுகமானார்.
தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார்.

கொரோனா காலகட்டம்
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அவர், கொரோனா காலகட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தார். அதாவது, கொரோனாவுக்காக கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் நிலைகுலைந்தனர். பலர் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டனர்.

தொழிலாளர்கள் தவிப்பு
ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், சோனு சூட், அவர்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த பணத்தைச் செலவழித்து உதவி செய்து வந்தார்.

மனிதாபிமான செயல்
விமானம் மூலமாகவும் தனி பேருந்துகளை ஏற்பாடு செய்தும் அனுப்பி வைத்தார். கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை கொடுத்தார். அவருடைய மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர்.

ஹீரோ வாய்ப்புகள்
சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர். அவர் வில்லன் அல்ல, நிஜ ஹீரோ என்றும் அவர் மனதுக்கு நல்லதே நடக்கும் என்றும் கூறினர். அவர் இப்போதும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் தனக்கு ஹீரோ வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சிரஞ்சீவி தயக்கம்
கலந்துரையாடல் ஒன்றில் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, தெலுங்கில் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறேன். வில்லன் வேடம்தான். ஆக்ஷன் காட்சிகளில் என்னை அடிப்பதுபோல நடிக்க, நடிகர் சிரஞ்சீவி தயங்கினார்.

ஏற்க மாட்டார்கள்
அவர், 'நீங்கள்தான் இப்போது படத்தில் பிரச்னை. உங்களை அடித்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள்' என்று கிண்டலாகச் சொன்னார். மற்றொரு காட்சியில் அவர் என்னை காலால் மிதித்திருப்பார். இந்த காட்சி எடுக்கப்பட்டு இருந்தது. பிறகு அதை மாற்றி எடுத்தார்கள். இப்போது எனக்காக கதைகள் மாற்றப்படுகின்றன. கொரோனா காலகட்டத்தில் என் பெற்றோரின் ஆசிர்வாதம் பலனளித்தது.

அதுவாக நடந்தது
அதனால்தான் ஆயிரக்கணக்கான மக்களிடம் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. என் மனதுக்குள் இருந்து ஒரு குரல் அதை செய் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் நான் அந்த உதவிகளில் ஈடுபட்டேன். முதலில் எப்படி செய்யப் போகிறேன் என்ற தயங்கினேன். பிறகு ஆரம்பித்ததும் அதுவாக நடந்தது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











