வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்.. தனது ரயில் பாஸை பதிவிட்ட ரசிகர்.. நெகிழ்ந்து போன நடிகர் சோனு சூட்!
சென்னை: இருபது வருடத்துக்கு முன் கஷ்டப்பட்ட காலத்தில், ரயிலில் சென்றபோது எடுத்த பாஸை, ரசிகர் ஒருவர் பதிவிட்டதைக் கண்டு, நடிகர் சோனு சூட் நெகிழ்ந்தார்.
Recommended Video
விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சோனு சூட். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இவர், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களைக் காப்பாற்ற பாடுபடும் கொரோனா வாரியர்ஸ் ஓய்வெடுக்க தனது ஓட்டலை கொடுத்திருந்தார்.

சொந்த செலவில்
பின்னர் தினமும் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வந்தார். இந்நிலையில் கொரோனாவால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உதவி செய்து வருகிறார். பேருந்துகளை சொந்த செலவில் ஏற்பாடு செய்து அனுப்பி வரும் அவரை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஹீரோ
படங்களில் வில்லனாக நடிக்கும் அவரை ஹீரோ என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். அவரை சூப்பர்மேனாக சித்தரித்தும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் சோனு சூட்டின் இந்த உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கும் மறுக்காமல் உதவி வருகிறார்.

தேவைப்பட்டால்
இதற்கிடையே எடக்கு மடக்கான உதவிகளையும் சிலர் கேட்டுவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், ஒருவர் மதுக்கடைக்குப் போக உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். இதைக் கண்ட சோனு சூட், சகோ, மதுக்கடையில் இருந்து வீட்டில் கொண்டு சேர்க்கத்தான் என்னால் உதவ முடியும். அப்படி உதவி தேவைப்பட்டால் தெரியப்படுத்துங்கள்' என்று டைமிங்காக பதிலளித்திருந்தார்.

அருவி போல
இந்நிலையில் அவரது டோல் ஃபிரீ வாட்ஸ் அப் எண்ணுக்கு ஏராளமானவர்கள் தகவலை கொட்டி வருகின்றனர். இதுபற்றி அவரை டீமைச் சேர்ந்த கே.கே.மூக்கே என்பவர் வாட்ஸப்பில் வந்த தகவல்கள் பற்றி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் மெசேஜ்கள் அருவி போல் வந்து விழுகின்றன.

சர்ச்கேட் பகுதி
இந்நிலையில் அரவிந்த் பாண்டே என்பவர், 20 வருடத்துக்கு முன், சோனு சூட் எடுத்திருந்த மாதாந்திர ரயில் பாஸை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பாஸ், மும்பை போரிவிலியில் இருந்து சர்ச்கேட் பகுதி வரை செல்லக் கூடியது. ரூ.420 -க்கு எடுக்கப்பட்ட அந்த பாஸ் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதை ரீட்வீட் செய்துள்ள சோனு சூட், நெகிழ்ச்சியாக வாழ்க்கை ஒரு வட்டம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications