கடைசி நேரத்தில் சோனு சூட்டுக்கு அனுமதி மறுப்பு.. தடுத்தது நாங்க இல்ல.. மும்பை போலீசார் விளக்கம்?
மும்பை: வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வரும் பிரபல நடிகர் சோனு சூட் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் தபங், ஹேப்பி நியூ இயர், சிம்பா உள்ளிட்ட பாலிவுட் படங்கள் என பல படங்களில் நடித்துள்ளார் சோனு சூட்.
வில்லனாக நடித்து பிரபலமான சோனு சூட் தற்போது குடும்பத்துடன் தொழிலாளர்கள் ஒன்று சேர பாடு பட்டு, சூப்பர் மேன், மகாத்மா என மக்களால் பாராட்டப்பட்டு வருவது சில அரசியல் தலைவர்களுக்கு பிடிக்காமல் போயுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள்
வடக்கில் இருந்து தெற்கிலும், தெற்கில் இருந்து வடக்கிலும் லட்சக்கணக்கான நபர்கள் வெளிமாநிலங்களில் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக உருவான லாக்டவுன் அவர்கள் வாழ்வில் பேரிடியாக விழுந்து விட்டது. வேலை கொடுத்த நிறுவனங்களும் பாதுகாப்பு செய்யாமல் கை விரிக்க, வெளிமாநில தொழிலாளர்கள் நடை பயணமாகவும், சைக்கிள் பயணமாகவும் சொந்த ஊர்களுக்கு செல்லும் அவல நிலை உருவானது.

சும்மா இருக்கவில்லை
புலம் பெயர் தொழிலாளர்களின் கஷ்டத்தை டிவியில் பார்த்துக் கொண்டு வெறுமனே அவர்களுக்காக டிவீட் போட்டுக் கொண்டு ஆறுதல் செய்ய நடிகர் சோனு சூட் விரும்பவில்லை. அவரே களத்தில் இறங்கினார். நூற்றுக் கணக்கான பேருந்துகளில் மாநில அரசுகளிடம் முறையாக அனுமதி பெற்று, வெளிமாநில தொழிலாளர்களை தனது சொந்த செலவில் அவரவர் ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் வாழ வழி செய்தார்.

அரசியல் விமர்சனங்கள்
மகாராஷ்ட்ராவில் நடைபெற்று வரும் சிவசேனா அரசை மட்டம் தட்டத் தான் பாஜக சோனு சூட்டை பின்னால் இருந்து இயக்குவதாகவும், திடீரென அவர் மகாத்மா ரேஞ்சுக்கு பார்க்கப்படுவதற்கு பின்புலமாக மிகப்பெரிய அரசியல் சதி விளையாட்டு இருப்பதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத் சாடினார்.

முதல்வரை நேரில் சந்தித்து
தேவையில்லாமல், பிரச்சனையை வளரவிட வேண்டாம் என நினைத்த நடிகர் சோனு சூட் கடந்த ஞாயிறன்று, மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்ரேவை அவரது இல்லத்தில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார் சோனு சூட். அதையும் விடாமல் சஞ்சய் ராவத் ஒரு வழியாக முதல்வர் இல்லத்தின் அட்ரஸை கண்டுபிடித்து விட்டார் சோனு சூட் என விமர்சித்து இருந்தார்.

தடுத்து நிறுத்தம்
இந்நிலையில், நேற்று இரவு ரயில் மூலமாக தொழிலாளர்களை பாந்த்ரா டு உத்தரபிரதேசம் அனுப்பல் இருந்த நடிகர் சோனு சூட், அவர்களை சந்திக்க செல்லும் போது, பாந்த்ரா ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாக பேசப்பட்டும் சோனு சூட் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மும்பை போலீஸ் விளக்கம்
மும்பை போலீஸ் தான் இந்த அராஜக செயலை செய்ததாக கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது RPF அதிகாரிகள் தான் சோனு சூட்டை தடுத்து நிறுத்தியதாகவும், அதுகுறித்து சோனு சூட் தரப்பில் இதுவரை எந்தவொரு புகாரும் தங்களுக்கு வரவில்லை என மும்பை போலீசார் புது விளக்கம் அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











