வெறும் கையோடு வந்தேன்.. இன்னும் நான் மறக்கவில்லை.. எமோஷனலாக பேசிய சூரி
சென்னை: சூரி கோலிவுட்டில் இப்போது முக்கியமான நடிகராக உருவெடுத்துவிட்டார். குறிப்பாக காமெடியன் என்ற இடத்திலிருந்து கதை நாயகன் என்ற இடத்துக்கு நகர்ந்திருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் மெகா ஹிட்டாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க கருடன் வெற்றியை தொடர்ந்து சூரி எமோஷனலாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அது ட்ரெண்டாகியுள்ளது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா காமெடியில் நடித்து அதன் மூலம் வெளிச்சம் பெற்றவர் சூரி. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் சினிமாவில் பார்க்காத வேலைகளே இல்லை. செட் அசிஸ்டெண்ட்டாக, ஆர்ட் அசிஸ்டெண்ட்டாக தனக்கு கிடைத்த வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார். காதல், தீபாவளி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்கள் ஏற்று தலை காட்டினார். ஆனாலும் அவருக்கான காலம் உடனடியாக வரவில்லை. கிட்டத்தட்ட 7 வருடங்கள் சொந்த ஊருக்குக்கூட போகாமல் வெறித்தனமாக உழைத்தார்.

சூரி பெற்ற வெற்றி: பிறகுதான் வெண்ணிலா கபடி குழு படம் அவருக்கான அடையாளத்தை கொடுக்க தொடர்ந்து காமெடி நடிகராக வளர தொடங்கினார். விஜய், அஜித், ரஜினி, சூர்யா என டாப் ஸ்டார்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். வெகுளித்தனமான முகம், சிரிக்க வைக்கும் பாடி லாங்குவேஜ் என காமெடியில் சரவெடி கொளுத்தினார். அதேசமயம் அவரது காமெடி அப்படி ஒன்றும் சிரிப்பை வரவைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மயங்கி விழுந்த இடம்: ஆனாலும் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு வரிசையாக நடித்து தள்ளினார். அதன் காரணமாக நன்றாக சம்பாதிக்கவும் செய்தார். சினிமாவில் வெல்ல வேண்டும் என்று போராடியபோது ஆடிஷனில் கலந்துகொண்ட இடத்தில் பசியின் காரணமாக மயங்கி விழுந்தார் சூரி. தான் சம்பாதித்த பிறகு அதே இடத்தை வாங்கி; இப்போது தனது அலுவலகமாக மாற்றியிருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் வெற்றி என்றால் இதுதான் வெறித்தனமான வெற்றி என்று சூரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கதையின் நாயகன்: சூழல் இப்படி இருக்க வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து கதையின் நாயகனாக மாறினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சூரியும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை அள்ளினார். அதனையடுத்து ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் கதை நாயகனாக நடித்தார். கடைசியாக அவர் கதையின் நாயகனாக கருடன் படத்தில் நடித்தார். படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
சூரி வீடியோ: இந்நிலையில் கருடன் வெற்றியை தொடர்ந்து சூரி வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில், “கருடன் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரத்தை எனது வாழ்க்கையில் நான் மறக்கவேமாட்டேன். கருடனை இவ்வளவு பெரிய வெற்றி படமாக்கிய அனைவருக்கும் என் சார்பாகவும், குடும்பத்தினர் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் கொண்டாடும் படமாக இது இருப்பதில் மகிழ்ச்சி.
வெறும் கையோடு வந்தேன்: 25 வருடங்களுக்கு முன்பு வெறும் கையோடு வந்த சூரியை இன்னும் நான் மறக்கவில்லை. இன்று நான் நடிகனாக நடிக்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் கொடுத்த இடம்தான் காரணம். கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் படங்களை வாழ்நாள் முழுக்க கொடுத்துக்கொண்டே இருப்பேன். அதற்கு முழு மூச்சாக வேலை செய்வேன்” என எமோஷனலாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











