ரூ.30 இருந்தா போதும்..வயிறார சாப்பிடலாம்.. ஏழைகளின் பசியை போக்கிய சூரி.. வாழ்த்தும் மக்கள் !
மதுரை : நடிகர் சூரி மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் திறந்திருக்கும் ஓட்டல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் சூரி. இவர் தனக்கென தனி பாணியை வைத்துக்கொண்டு நகைச்சுவையில் கலக்கி வருகிறார்.
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவான நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தாறுமாறாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்குடன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றி உள்ளார் சூரி.

விடுதலை
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

கடுமையான ஒர்க் அவுட்
இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற நக்சலைட் போராளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை நடிகரான சூரி இப்படத்தில் போலீசாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு இசையானி இளையராஜா இசையமைத்து வருகிறார். முதன்முதலாக வெற்றிமாறானும் இளையராஜாவும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

அம்மன் உணவகம்
இந்நிலையில், நடிகர் சூரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அம்மன் உணவகத்தை தொடங்கி உள்ளார். இந்த உணவகத்தில் உணவு தரமானதாகவும், அதே நேரத்தில் விலை குறைகாவும் உள்ளதால், நடிகர் சூரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மதுரை ராஜாஜி பொது மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

தரமான சாப்பாடு
இந்த ஓட்டலை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் இந்த ஓட்டலுக்கு டென்டர் எடுத்தவர்கள் எல்லாம் மிகவும் குறைவான பணத்தைத்தான் வாடகையாக கொடுத்தார்கள். அதுமட்டும் இல்லாமல், சாப்பாட்டின் விலையை மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது சாப்பாடு தரமானதாகவும் விலை குறைவாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஏழைகளின் நாயகன் சூரி
இந்த ஓட்டலில் தக்காளி சாதம், லெமன் சாதம்,தயிர் சாதம், புளி சாதம், நெய் சாதத்தின் விலை 30ரூபாய் என்றும், பொன்னி அரிசி சாதம், சாம்பர், ரசம், பொறியல்,மோர், ஊறுகாயுடன் கூடிய புல்மீல்ஸ் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இதனால் அங்கு வரும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்காக இந்த ஓட்டலை தொடங்கி உள்ள சூரிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











