ஐஸ்வர்யா லட்சுமி பெரிய ஆதரவாக இருந்தார்.. மாமன் சூரி புகழாரம்.. ஒரு முடிவோடுதான் இருக்காரு
சென்னை: சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன் திரைப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. அவரே எழுதியிருந்த கதையை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாபா மாஸ்டர் என பலரும் நடித்திருந்தார்கள். இந்நிலையில் படத்தில் பணியாற்றியவர்களை தொடர்ந்து பாராட்டிவரும் சூரி இப்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமியையும் பாராட்டியிருக்கிறார்.
விடுதலை படத்திலிருந்து கதை நாயகனாக மாறினார் சூரி. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக சூரியின் நடிப்பை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆக்ஷன் காட்சிகளில் அவர் எடுத்த ரிஸ்க்குகள், காதல் காட்சிகளில் அவரது ரொமான்ஸ் என அனைத்துமே பாராட்டப்பட்டது. படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடிப்பது என்ற உறுதியான முடிவை எடுத்துவிட்டார் அவர்.
வரிசையாக ஹிட்டுகள்: அதன்படி பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் கொட்டுக்காளி படமானது வசூல் ரீதியாக அடி வாங்கியது. அதேசமயம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அதேசமயம் கருடன் திரைப்படமோ நல்ல கமர்ஷியல் ஹிட்டாகவும் மாறிவிட்டது. அடுத்ததாக வெளியான விடுதலை 2 கலவையான விமர்சனத்தை பெற்றது.

மாமன் சூரி: சூழல் இப்படி இருக்க அவரே கதை எழுதிய மாமன் திரைப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். இதில் அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண் என பலரும் நடித்திருந்தார்கள். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. மேலும் பல காட்சிகள் கிரிஞ்சாக இருந்ததாகவும்; இது ஒரு பிற்போக்குத்தனமான கதை என்றும் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள்.
பாராட்டும் சூரி: இப்படி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களை சூரி தொடர்ந்து பாராட்டிவருகிறார். முதலில் ராஜ்கிரண் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ராஜ்கிரண் சார் அவர்களின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும். மாமன் படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது.
திரையில் பெருக செய்தது: 'சிங்கம்' என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை - அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அதை வாழ்ந்தார். அவரது ஆழமான உணர்ச்சி வெளிப்பாடுகள், குறிப்பாக விஜி மேடம் அவர்களுடன் பகிர்ந்த அழகான கேமிஸ்ட்ரி, அந்தக் கதையின் நட்பும் நேசமும் பூரணமாகத் திரையிலே பெருகச் செய்தது. இந்திய சினிமாவின் வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள ரஜ்கிரண் சார் அவர்களுடன் ஒரு காட்சியில் மட்டுமல்ல, ஒரு முழு படத்தையே பகிர்ந்து நடிக்க முடிய்ந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த ஆசீர்வாதம்" என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் பாபா பாஸ்கரையும் பாராட்டியிருந்தார்.
ஐஸ்வர்யா லட்சுமிக்கும் பாராட்டு: இந்நிலையில் மாமன் படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மாமன் படத்துக்கு ஐஸ்வர்யா லட்சுமி பெரிய ஆதரவாக இருந்தார். அவர் உண்மையில் மருத்துவர். என்வே மருத்துவர் கேரக்டரை படத்தில் நம்பிக்கையாகவும், இயல்பாகவும் நடித்திருந்தார். அவருடைய நல்ல மனது, நேர்மை அவரை இன்னும் உயரத்துக்கு அழைத்து செல்லும். படத்தைப் பிரமோட் செய்யவும், முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











