சரியும் சந்தானம்.. சிக்ஸர் அடித்த சூரி.. டிடி நெக்ஸ்ட் லெவல் vs மாமன் 3 நாள் வசூல் எவ்வளவு?
சென்னை: பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே 16ம் தேதி வெளியான மாமன் திரைப்படம் சென்னையை கடந்து பிற மாவட்டங்களில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த நிலையில், முதல் 3 நாட்களில் நல்ல வசூல் வேட்டையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று வசூல் சற்றே குறைந்துள்ளது. இந்த இரு படங்களில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் என்றால் அது சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் தான் என்கின்றனர்.

யோகி பாபு முதல் பந்திலேயே டக் அவுட் ஆன நிலையில், சூரி மற்றும் சந்தானம் கடுமையான போட்டியை பாக்ஸ் ஆபீஸில் நிகழ்த்தி வருகின்றனர். 2வது வாரமும் இந்த 2 படங்களும் கல்லா கட்டுமா? அல்லது மொத்தமாக முடிந்து விடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாசத்தால் கலங்க வைத்த சூரி: கொட்டுக்காளி படத்தில் தாய் மாமன் சீர் வரிசையே பகடி பண்ணி காட்சி வைத்திருப்பார்கள். ஆனால், மாமன் படத்தில் அக்கா - தம்பி பாசம், மாமன் - மருமகன் பாசம், கணவன் - மனைவி கடைசி வரை எப்படி இருக்க வேண்டும் என ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கி சூரி எழுதி நடித்துள்ள மாமன் படத்தை பார்த்து தியேட்டரில் இருந்து மக்கள் கூட்டம் கண் கலங்கி வெளியே வருகின்றனர். அதுவே அந்த படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளதாக கூறுகின்றனர்.
பெருசா சிரிப்பு வரல: டிடி ரிட்டர்ன்ஸ் படம் அளவுக்கு டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ரசிகர்களை சந்தானம் சிரிக்க வைக்க தவறிவிட்டார் என கடுமையான குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், அந்த படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ஏகப்பட்ட சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்ற நிலையில், பொதுமக்களுக்கு அது புரியவில்லை என பலரும் விமர்சித்துள்ளனர்.
மாமன் 3 நாள் வசூல்: சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் முதல் நாளில் 1.75 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்த நிலையில், 2வது நாளில் 2.95 கோடியாக உயர்ந்த வசூல் நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டென அதிகரித்து அதிகபட்சமாக 4.93 கோடி வசூல் செய்தது. ஒட்டுமொத்தமாக முதல் 3 நாட்களில் 9.64 கோடி வசூலை மாமன் படம் அள்ளியிருக்கிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல் 3 நாள் வசூல்: சந்தானம், கீதிகா, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்தர், நிழல்கள் ரவி, செல்வராகவன் மற்றும் கெளதம் மேனன் என நட்சத்திர பட்டாளமே நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் முதல் நாளில் 3 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாளில் 3.1 கோடி வசூலும் 3வது நாளான ஞாயிற்றுக்கிழமையும் பெரிதாக வசூல் அதிகரிக்காமல் வெறும் 3.3 கோடி வசூல் என ஒட்டுமொத்தமாக இதுவரை 9.40 கோடி வசூலை ஈட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











