Soori - ரசிகரின் தாயை நேரில் சென்று சந்தித்த சூரி - அதுவும் எப்படி தெரியுமா?
சென்னை: Soori (சூரி) உடல்நலம் சரியில்லாத தனது ரசிகரின் தாயை சூரி நேரில் சென்று பார்த்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.
முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு எமோஜி ரகம்.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருக்கும் சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து கொட்டுக்காளி என்ற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.

புகழ்ந்த சேவாக்: ரொம்பவே கஷ்டப்பட்டு இப்போது வளர்ந்திருக்கும் சூரி சமீபத்தில் ஒரு ஐபிஎல் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக்கை சந்தித்தார். அப்போது உங்களது படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன் என சேவாக் சூரியிடம் கூறும் வீடியோ ட்ரெண்டானது.
சூரியின் செயல்: இந்நிலையில் மதுரை தத்தனேரி அருகே உள்ள பாக்கியநாதபுரம் பகுதியில் உள்ள சூரியின் தீவிர ரசிகரான மகதீரன் என்பவரின் தாய் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். இதனைக் கேள்விப்பட்ட சூரி உடனடியாக நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவர் ஆட்டோவில் சென்றது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து பேசிய சூரி, "என் அன்பு தம்பிகள். என்னை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். என் பெயரை சொல்லி பல உதவிகள் செய்கிறார்கள். என்னால் எதுவும் இல்லை. என் ரசிகரின் அம்மாவை என் அம்மாவாக பார்க்க வந்து இருக்கிறேன். இதுவே எனக்கு பெருமை" என்றார்.


Click it and Unblock the Notifications











