வெற்றிமாறன், சிவகார்த்திகேயன் வரிசையில் அமீர்... சூரிக்கு அடித்த ஜாக்பாட்... இனி ஹீரோ மட்டும் தானா?
சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.
சூரி முதன்மை பாத்திரத்திலும், விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரிலும் நடித்துள்ளனர்.
விடுதலை படத்தைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க சூரிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், விடுதலை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சூரி, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி உட்பட 3 படங்களில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பில் விடுதலை
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படத்தின் மூலம் இதுவரை காமெடியில் கலக்கிய சூரி முதன்முறையாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதி லீடிங் கேரக்டரில் நடிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார்.

சூரியின் ஹீரோ அவதாரம்
பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து, அதன்பின் காமெடியனாக நடிக்கத் தொடங்கியவர் சூரி. தற்போது விடுதலை படம் மூலம் ஹீரோவாகவும் நடித்துவிட்டார். முக்கியமாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளது கோலிவுட்டையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதுகுறித்து அவரே விடுதலை இசை வெளியீட்டு விழாவில் பெருமிதமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் கொட்டுக்காளி
விடுதலை சூரியின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து விடுதலை வெளியாகும் முன்பே சிவகார்த்தியேன் தயாரிப்பில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார் சூரி. 'கூழாங்கல்' திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த வினோத் இயக்கத்தில் 'கொட்டுக்காளி' என்ற படத்தை இயக்கவுள்ளார். சிவா இயக்கும் இந்தப் படத்தில் சூரியே ஹீரோவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

அமீர் இயக்கத்தில் சூரி
இந்நிலையில், விடுதலை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நான் காமெடி கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே சில இயக்குநர்கள் என்னை ஹீரோவாக நடிக்கக் கேட்டனர். விடுதலையில் வேறு சூரியை பார்க்க முடியும். இந்தப் படத்திற்காக பல படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறிவிட்டேன். இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் இயக்கும் படத்திலும், விக்ரம் சுகுமாரன் இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறேன். முக்கியமாக அமீர் இயக்கும் படத்திலும் நாயகனாக நடிக்கவுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











