புயல் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் சூரி.. இப்போ ஹீரோ.. அடுத்த அவதாரம் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக கருடன் படம் வெளியானது. துரை செந்தில் குமார் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய ஹிட் படமாக அமைந்திருக்கிறது. அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.
செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் சினிமாவில் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.
முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே சிரிப்பு எமோஜி ரகம்.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். கடந்த வருடம் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. அடுத்ததாக நடித்த கருடன் படமும் மெகா ஹிட்டானது.
கொட்டுக்காளி: கதையின் நாயகனாக சூரி நடித்த விடுதலை, கருடன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் வரவேற்பை பெற்றன. அடுத்ததாக வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார் சூரி. படமானது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் விருதுகளை அள்ளியிருக்கிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது. இன்று வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கும் செம வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார் அவர்.
அடுத்த அவதாரம்: இந்நிலையில் சூரி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் மதுரையை பின்னணியாக வைத்து ஒரு கதையை எழுதியிருப்பதாகவும்; அதனை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒளிபரப்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வெப் சீரிஸில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்றும்; இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக சூரியை பற்றி விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் பேசும்போது, சூரியின் வாழ்க்கையையே சினிமாவாக எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











