சூரியின் கொட்டுக்காளி.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சூரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் எப்போது ரிலீஸாகும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அடையாளப்பட்ட சூரி தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார். அதன் காரணமாக முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்துக்கும் நகர்ந்தார். அஜித், விஜய், ரஜினி, சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் அவர் செய்த காமெடிகள் சமயங்களில் ரசிக்கப்படாமலும்; சமயங்களில் ரசிக்கப்பட்டும் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் சூரியை கதையின் நாயகனாக மாற்றினார்.

விடுதலை: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான விடுதலையில் சூரி கதையின் நாயகனாக அறிமுகமாகி; தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருந்தார். சண்டைக்காட்சிகளில் எடுத்திருந்த ரிஸ்க், உடல்மொழி என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கிய அவர் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார் என்று ரசிகர்கள் அவரை உச்சி முகர்ந்து கொண்டாடினர். எனவே இனி சூரி கதையின் நாயகனாகவே பயணப்படுவார் என்று ஆரூடமும் கூறப்பட்டது.
கருடன்: அதன்படியே அவரது நடிப்பில் கருடன் படம் வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது. முக்கியமாக சூரியின் நடிப்பு அசுர பாய்ச்சலில் இருப்பதாகவும்; இத்தனை வருடங்கள் பட்ட கஷ்டத்துக்கு சூரிக்கு இப்போதுதான் தீனி கிடைக்க ஆரம்பித்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். அதேபோல் சூரியுடன் நடித்த இயக்குநரும், நடிகருமான சசிக்குமார், ''இனி சூரி கதையின் நாயகன் இல்லை; கதாநாயகன்.. அவருக்காக கதை எழுதுவார்கள்"" என்று வாழ்த்தியிருக்கிறார்.
இனி ஹீரோதான்: சூரியும் அதை ஏற்கும் விதமாக இனி கதாநாயகனாகவே நடிப்பேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்த மூன்று படங்களுமே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்தன. எனவே இனி வரும் காலங்களில் சூரியின் கதை தேர்வு அட்டகாசமானதாக இருக்கும் என்பதை கண்டிப்பாக நம்பலாம்.
ரிலீஸ் தேதி: குறிப்பாக கொட்டுக்காளி படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் கூழாங்கல் படத்தை இயக்கி பெரும் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











