எங்கள் வீட்டு மகாராணிக்கு.. செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள்.. பரபரக்கும் போஸ்டர்கள்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் மற்றும் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
படையப்பா படத்தில் இருந்தே கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்.
சமீபத்தில் செளந்தர்யாவையும் பேரனையும் பார்க்க அவரது வீட்டுக்கு ரஜினிகாந்த் லம்போகினி காரில் சென்றது வைரலானது குறிப்பிடத்தக்கது.
செளந்தர்யா ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே செளந்தர்யா
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கிராபிக் டிசைனர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர் செளந்தர்யா ரஜினிகாந்த். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, #HBDSoundaryaRajinikanth என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

கிராபிக் டிசைனர்
1984ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்துக்கு மகளாக பிறந்தார். வேளச்சேரியில் உள்ள ஆசிரம் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த செளந்தர்யா ரஜினிகாந்த், கிராபிக் டிசைனிங்கில் ஆர்வம் கொண்டு அதனை கற்றுக் கொண்டார். படையப்பா படத்தின் டைட்டில் டிசைனை அப்போதே வடிவமைத்து அசத்தினார். சந்திரமுகி, அன்பே ஆருயிரே, மஜா, சண்டக்கோழி, சென்னை 28 என ஏகப்பட்ட படங்களுக்கு இவர் கிராபிக் டிசைனராக பணியாற்றி உள்ளார்.

வெங்கட் பிரபு படம்
சென்னை 28 படத்திற்கு கிராபிக் டிசைனராக பணியாற்றிய போது, இயக்குநர் வெங்கட் பிரபு உடன் ஏற்பட்ட நட்பு காரணமாக 2010ம் ஆண்டு வெளியான கோவா படத்தை தயாரித்து இருந்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். சிஜி, அனிமேஷன் என ஏகப்பட்ட துறையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.

கோச்சடையான்
2007ம் ஆண்டு சுல்தான் தி வாரியர் எனும் அனிமேஷன் படத்தை இயக்க முன் வந்த செளந்தர்யா ரஜினிகாந்துக்கு ஏகப்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக அந்த படம் அப்படியே தள்ளிப் போனது. பின்னர், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதையில் உருவாக இருந்த ராணா படம் டிராப் ஆனதால், இரண்டையும் மிக்ஸ் பண்ணி கோச்சடையான் படத்தை 2014ம் ஆண்டு இயக்கி இருந்தார்.

விஐபி 2
அக்கா ஐஸ்வர்யா தனுஷின் கணவரும் நடிகருமான தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தையும் செளந்தர்யா ரஜினிகாந்த் தான் இயக்கினார். தனுஷ், கஜோல், அமலா பால், விவேக் நடிப்பில் வெளியான அந்த படம் கலவையான விமர்சனங்களுடன் ஓடியது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் வெப்சீரீஸையும் இயக்கி வருகிறார்.

போஸ்டர் அடித்த ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக எந்தவொரு போஸ்டர்களையும் அடிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், செளந்தர்யா ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, "எங்கள் வீட்டு மகாராணிக்கு" பிறந்தநாள் என போஸ்டர்களை அடித்தும் ரசிகர்கள் அசத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











