‘படையப்பா 2’ கதை ரெடி.. ஆனால், இயக்குநர்?.. சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!
சென்னை: இயக்குநரும், ரஜினியின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் 'வித் லவ்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'படையப்பா 2' கதை ரெடியாக உள்ளது என்றார்.
ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர் 2. முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினி தனது 173 படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கின்றார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு பிறகு தான் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு மாதத்திற்குள் படக்குழு வெளியிடும்.

படையப்பா 2: இந்நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் 'வித் லவ்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சௌந்தர்யாவிடம், ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கப்போகிறாரா ? படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சௌந்தர்யா, தற்போது, பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கின்றது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வரும். நான் அப்படத்தில் பணியாற்றவில்லை என்றார். தொடர்ந்து பேசிய சௌந்தர்யா, 'படையப்பா 2' படத்தின் முழு கதையை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே ஏற்கனவே எழுதி முடித்துள்ளார். அந்த கதை மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. ஆனால், இந்த படத்தை இயக்கும் இயக்குநர் யார்?, எப்போது படமாகும்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன், பிரகாஷ் ராஜ், நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படத்தில் மிகப்பெரிய வசூலை அள்ளியது. இப்படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் இன்றளவு பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











