அட்ஜெஸ்மெண்ட் ரெண்டு பேரின் தனிப்பட்ட விஷயம் - நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ்
சென்னை: ஒட்டுமொத்த திரையுலகமுமே கடந்த சில தினங்களாக மிகவும் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் விஷயம் மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை குறித்துதான். இது தொடர்பாக வெளியாகியுள்ள ஹேமா கமிஷன் அறிக்கை இதனை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, சினிமா துறையில் நுழைவதற்கும், தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெறவும் நடிகைகள் பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தர வேண்டும் என அழுத்தம் தரப்படுகிறது என குறிப்பிடப்பட்டடிருந்தது.

படப்பிடிப்புத் தளம், போக்குவரத்து, தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றிலும் கூட பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோக சம்பவங்கள் நடைபெறுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், பாலியல் ரீதியான கோரிக்கைகளுக்கு இணங்க மறுக்கும் நடிகைகளைக் குறிவைத்து சித்திரவதை செய்யும் சம்பவங்களும் நடைபெறுகின்றது எனவும், சினிமாவில் பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் கூட மீறப்படுகிறது எனவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரணமாக: இதுமட்டும் இல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் கழிவறை, உடை மாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தருவது இல்லை எனவும், தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெண்கள் குரல் கொடுத்தால் இனி சினிமா துறையில் பணிபுரியவே முடியாத வகையில் தடை விதிக்கப்படும் என மிரட்டுவதும் மலையாள சினிமா உலகில் மிகவும் சாதாரணமாக நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்து. இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஷனம் ஷெட்டி: மலையாள சினிமாவில் இப்படி என்றால், தமிழ் சினிமாவிலும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னை இருக்கின்றது என நடிகை ஷனம் ஷெட்டி பேசியுள்ளார். மேலும் தன்னை யாராவது அட்ஜெஸ்மெண்டுக்கு அழைத்தால், செருப்பாலேயே அடிப்பேன் எனக் கூறி போனை வைத்து விடுவேன் எனக் கூறினார். இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகர் சங்க துணைத் தலைவருமாக இருப்பவர் நடிகர் கருணாஸ். இவரிடம் நடிகைகள் அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைகளை எதிர்கொள்கின்றார்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கருணாஸ் & அட்ஜெஸ்மெண்ட் : அதாவது, " அட்ஜெஸ்மெண்ட் என்பது சினிமாவுல மட்டும்தான் இருக்கு என உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? இந்த சமூகத்தில் வேறு எங்கேயும் இல்லையா? அது ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம். யாருடைய விருப்பமும் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை. நான் வெளியூரில் இருந்ததால் எனக்கு அது குறித்து (ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து) தெரியவில்லை. தெளிவாகத் தெரிந்து கொண்டு வரக்கூடிய காலங்களில் பதில் சொல்கின்றேன்" எனக் கூறியுள்ளார். நடிகர் சங்க துணைத்தலைவராக இருக்கும் கருணாஸ் சினிமா துறையில் உள்ள அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைக்கு இது போன்ற பதிலை அளித்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











