நடிகர் சங்க தேர்தல்.. எப்போது வாக்குகள் எண்ணப்படும்.. அக்.15ம் தேதி சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு!
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15 ம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் அக்டோபர் 15ம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக இரண்டு வெவ்வேறு வழக்கு நடந்து வந்தது. இதை ஒன்றாக விசாரிக்க நடிகர் சங்கர் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடம் இருந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி கல்யாண சுந்தரம் முன் பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்குகள் இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தலுக்கு தடை கோரியும், தேர்தலை ரத்து செய்ய கோரியும் ஏழுமலை, பெஞ்சமீன் ஆகியோர் கோரிக்கை வைத்ததன்.
இதில் ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நடிகர் சங்க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், ஜூன் 23 ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விடாமல் தொடர்ந்து வழக்கில் கால அவகாசம் கோரி வருவதாகவும், தற்போது வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் தரப்பினருக்கு அவகாசம் வழங்கும் வகையில் வழக்கை அக்டோபர் 15 ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி கல்யாண சுந்தரம் உத்தரவிட்டார். மேலும், அக்டோபர் 15 அன்று அவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைத்தாலும், இல்லாவிட்டாலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











