தென்னகத்து லதா மங்கேஷ்கர் பி.சுசிலா..தமிழக மக்களை கட்டிப்போட்ட இசை அரசி
தமிழ் திரையுலகில் மூன்று தலைமுறை மக்களை தன் வசீகர குரலால் மனம் கவர்ந்தவர் பி.சுசீலா.நேற்று 87 வது பிறந்த நாளை கொண்டாடினார்.
1955 ஆம் ஆண்டு வெளியான கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் அறிமுகமாகி தமிழ் மக்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் சுசீலா
5 தேசிய விருதுகளை பெற்றவர், 1990 ஆம் ஆண்டுவரை சுசீலா குரல் ஒலிக்காத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்.

தமிழ் திரையுலகை திருப்பிப்போட்ட 1950-கள்
தமிழ் திரையுலகம் மெல்ல எழுந்து நடக்கத்தொடங்கி வேகமெடுக்கத்தொடங்கிய காலம். கதை, திரைக்கதை, இயக்கம், இசை என அனைத்து துறையிலும் முழு வேகம் எடுத்த நேரம் இசைத்துறையிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மஹாதேவன் உள்ளிட்டோர் ஆதிக்கம் செலுத்திய நேரம். ஏ.எம்.ராஜா, பி.லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர் கதாநாயக-நாயகிகளுக்கு குரல் கொடுத்த நேரத்தில் புயலென நுழைந்தது ஒரு ஜோடி. டி.எம்.எஸ்-பி.சுசீலா தான் அது.

1950 களில் டி.எம்.எஸ், பி.சுசிலா வருகை ஆதிக்கம்
1954 ஆம் ஆண்டு சிவாஜிக்காக தூக்கு தூக்கி படத்தில் இரண்டு பாடல்களை பாடி அறிமுகமானார் டி.எம்.எஸ். குரலை சற்று கண்மூடி மவுனமாக கேட்ட சிவாஜி இனி இவரே எனது பாடல்களை பாடட்டும் என்று சொன்னார். அதேபோல் எம்ஜிஆருக்கும் அவரே. இதேபோல் 1955 ஆம் ஆண்டு கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் உன்னை கண் தேடுதே, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ என்கிற இரண்டு பாடல்கள் மூலம் அறிமுகமான பி.சுசிலா இணை தமிழகத்தில் அடுத்த 35 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தினர்.

வானொலியின் கானக்குரலாக இல்லங்களில் ஒலித்த பி.சுசிலா குரல்
60, 70, 80 களில் டேப்ரிக்கார்டர் வராத காலக்கட்டத்தில் வானொலியில் உங்கள் விருப்பத்தில் அனைவரும் எப்போதும் கேட்கும் ஒரு வசனம் இந்த படத்துக்காக டி.எம்.சௌந்தர்ராஜன்-பி.சுசிலா பாடிய பாடல் என்றே இருக்கும். இதை யாரும் மறந்திருக்க முடியாது. சுசிலா குரலில் அறிமுகமாகாத கதாநாயகிகளே இல்லை எனலாம். மன்னவனே அழலாமா என்கிற பாடல் மூலம் கே.ஆர்.விஜயா கற்பகம் படத்தில் அறிமுகமானார். பருவம் எனது பாடல் மூலம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அறிமுகமானார் ஜெயலலிதா.

காதல், சோகம், துள்ளல் பாடல்களில் நம் நெஞ்சம் நிறைந்த பி.சுசிலா
இப்படி கதாநாயகிகளுக்கு காதல், சோகம், துள்ளல் இசைப்பாடல்களை ஆயிரக்கணக்கில் பாடி தமிழ் மக்கள் மட்டுமல்ல தென் இந்திய படங்களின் இசை அரசியாக சுசிலா விளங்கினார். ஒரு காலத்தில் தென் இந்தியா முழுவதும் டி.எம்.எஸ், கண்டசாலா, பிபி.ஸ்ரீனிவாஸ் என அனைத்து மாநில வானொலிகளிலும் காதல், சோகம், துள்ளல் பாடலாக சுசிலாவின் குரல் ஒலித்தது. தமிழில் தாலாட்டு பாடல், கல்யாணத்தில் ஒலித்த தோழியின் வரவேற்பு பாடல், காதல் பாடல், காதல் தோல்வி பாடல், சகோதரப்பாடல், சமயப்பாடல் என தோழியாக, சகோதரியாக, உறவாக, காதலியாக பல குரல்களில் வந்து மனதை வருடிய குரல் சுசிலாவின் குரல்.

சுசிலாவின் காலத்தில் இனிமையான குரல் வள பற்றாக்குறை
சுசிலா காலத்தில் அவரளவிற்கு இனிமையாக குரல்வளம் கொண்ட பாடகி இல்லை, எல்.ஆர்.ஈஸ்வரி கம்பீர குரலுக்கும், வில்லத்தனமான பாத்திரங்களின் குரலுக்கும் பொருந்தினார். அதனால் மென்மையான கதாநாயகிகளின், காதல், சோக பாடல்களில் சுசிலா கலக்கினார். தனது பாடல்களுக்காக 5 முறை சிறந்த பாடகிக்கான விருதை சுசிலா பெற்றுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதை முதன் முதலில் பெற்றவரும் பி.சுசிலாவே. உயர்ந்த மனிதன் படத்துக்காக "நாளை இந்த வேளைப்பார்த்து ஓடி வா நிலா" பாடலுக்காக 1968 ஆம் ஆண்டு விருது பெற்றார்.

17000 பாடல்களுக்கு மேல் தென் இந்திய மொழிகளில் பாடி சாதனை
பி.சுசிலா தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அதிக பாடல்களை பாடியுள்ளார். இதில் தெலுங்கில் 12000 பாடல்களை பாடியுள்ளார். தமிழில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இதில் டி.எம்.எஸ் உடன் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். எஸ்.பி.பி உள்ளிட்ட பலரின் அறிமுக பாடல்கள் பி.சுசிலாவுடன் இருந்துள்ளது. தமிழில் தமிழ் தாய் வாழ்த்தை டி.எம்.எஸ் உடன் சேர்ந்து சுசிலா பாடியது அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வு ஆகும். இவர் பாடிய அதிக எண்ணிக்கையான பாடல்களுக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

90 களுக்கு பிறகு அவ்வப்போது பாடி கலக்கிய சுசிலா
30 ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்திய பி.சுசிலா இளையராஜாவின் வரவுக்குப்பின் தமிழில் அதிகம் பாடவில்லை என்கிற குறை உண்டு. எஸ்.ஜானகி உள்ளிட்ட பலரும் ஆதிக்கம் செலுத்தியதால் அவர் பாடல் பாடுவது குறைந்தது. அதன் பின்னர் அவ்வப்போது பாடும் அவர் பாடல் அனைத்தும் ஹிட். அதில் முக்கியமானது சோலை புஷ்பங்களே எனும் பாடல் பெரிதாக வரவேற்கப்பட்டது. உன் நெஞ்சத்தொட்டு சொல்லு என் ராசா என்கிற பாடலும் ரசிக்கப்பட்டது. சுசிலாவின் குரலில் இருக்கும் ஒருவகையான இனிமையும், சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவரும் கேட்டு வளர்ந்ததும் அவரது பாடலுக்கு இன்றும் வரவேற்பு இருப்பதற்கு காரணம் எனலாம்.

நமக்கு பிடித்த பாடல்களை வழங்கிய பி.சுசிலாவுக்கு பிடித்த பாடல்
72 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கடந்து, இன்று சொந்தமாக அறக்கட்டளை வைத்து நலிந்த கலைஞர்களுக்கு உதவுவது, பென்ஷன் வழங்குவது, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என தனது 87 வது வயதில், ஓய்வுக்காலத்தை அமைதியாக கழிக்கிறார் பி.சுசிலா. 17000 பாடல்களுக்கு மேல் பல மொழிகளில் பாடிய பி.சுசிலாவுக்கு பிடித்த பாடல் உரிமைக்குரல் படத்தில் ஜேசுதாசுடன் சேர்ந்து பாடிய விழியே கதை எழுது பாடல் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அவரது பாடலை நேசிக்கும் நமக்கு இந்த கட்டுரையில் எழுத இடமில்லாத அளவுக்கு பட்டியல் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











