குவிகிறது இரங்கல்.. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் அடக்கம்.. ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா அறிகுறி
லேசான கொரோனா அறிகுறிகள்தான் என்றும் விரைவில் திரும்பி விடுவேன் என்றும் கூறியிருந்தார். கடந்த மாதம் 13 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நிலை மோசம்
வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவர் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்தனர். பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 51 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை நேற்று மோசமானது.

காலமானார்
இந்நிலையில் அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 74. இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு சாவித்ரி என்ற மனைவி, பல்லவி என்ற மகள், எஸ்.பி.பி.சரண் என்ற மகன் உள்ளனர். எஸ்.பி.பி மறைவை அடுத்து ரசிகர்களும் சினிமா பிரபலங்களும், சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பண்ணை வீட்டில்
இந்நிலையில், அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு சென்னை காம்தார் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கு 6 மணிவரை அவர் உடல் வைக்கப்படும். பின்னர் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், அடக்கம் செய்யப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











