தண்ணீர் பற்றாக்குறை இவரையும் விட்டு வைக்கல.. மேடையில் வேதனைப்பட்ட எஸ்பிபி!
சென்னை: சென்னையை வாட்டும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும் தப்பவில்லை.
சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
அனைத்து தரப்பினரையும் தண்ணீர் பிரச்சனை வெகுவாக பாதித்துள்ளது. இந்த தண்ணீர் பிரச்சனையில் இருந்து பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியமும் தப்பவில்லை.

எஸ்பி பாலசுப்பிரமணியம்
நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தன்னுடைய தண்ணீர் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
அப்போது பேசிய அவர் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு நாம்தான் காரணம் என்றார். மேலும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார்.

வாரத்திற்கு இரண்டு ஆடைகள்
தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்தலாம் என்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அறிவுரை கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு ட்ரெஸ் போடாமல் ஒரு வாரத்திற்கு இரண்டு ஆடைகளை மாற்றி மாற்றி போட்டுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

கட்டாயத்தில் உள்ளோம்
தட்டில் சாப்பிடுவதை தவிர்த்து இலையில் சாப்பிட்டால் தட்டு கழுவுவதற்கு ஆகும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார். அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அரை மணிநேரம்
அடுத்த தலைமுறைக்கு சொத்து மற்றும் பணத்தை சேமித்து கொடுப்பதை விட தண்ணீரை சேமித்து கொடுப்பதுதான் முக்கியம் என்றும் அவர் கூறினார். மேலும் தன்வீட்டு பாத்ரூமில் அரை வாளி தண்ணீர் பிடிக்க அரை மணிநேரம் காத்திருந்ததாகவும் எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











